2701.

     வகை அறியேன் சிறியேன்சன் மார்க்க மேவும்
          மாண்புடைய பெருந்தவத்தோர் மகிழ வாழும்
     தகைஅறியேன் நலம்ஒன்றும் அறியேன் பொய்ம்மை
          தான்அறிவேன் நல்லோரைச் சலஞ்செய் கின்ற
     மிகைஅறிவேன் தீங்கென்ப எல்லாம் இங்கே
          மிகஅறிவேன் எனினும்எனை விடுதி ஆயில்
     பகைஅறிவேன் நின்மீதில் பழிவைத் திந்தப்
          பாவிஉயிர் விடத்துணிவேன் பகர்ந்திட் டேனே.

உரை:

      பெருமானே, திருவருளைப் பெறுதற்குரிய வழி வகைகளை அறிவிற் சிறுமை யுடையவனாதலால் அறிந்திலேன்; சன்மார்க்க மென்னும் ஞான நெறியை மேற்கொண்ட மாண்பு மிக்க தாபதர்கள் கண்டு மகிழும் படியான பெருநெறியும் அறிந்திலேன்; அதனாற் பெறலாகும் நன்மைகளை அறியேன்; பொய் யுரைத்துத் திரியத் தெரிவேன், குணம் செயல்களில் நல்லவர்களை வஞ்சிக்கும் மிக்க செயல்களை நன்கு அறிவேன்; இவ்வுலகில் தீயவை யெனப்படும் எல்லாச் செயல்களையும் மிகவும் அறிந்துள்ளேன்; இப்படிப் பட்டவ னென்றாலும், என்னைக் கைவிடுவாயாயின் நின்மேற் பகைமை கொண்டு நினக்குப் பழி யுண்டாகுமாறு பாவியாகிய யான் எனது உயிரை விடுதற் கேற்ற தொன்றைத் துணிவுடன் செய்வேன்; எனது உட்கோளையும் இப்போது சொல்லி விட்டேன்; தக்கது செய்தருள்க. எ.று.

      குறிப்பிட்ட ஓர் ஊரை யடைதற்குப் பல வழிகள் இருப்பது போலத் திருவருளைப் பெறுதற்குச் சரியை, கிரியா, யோகம், ஞானம் எனவும், சற்புத்திர மார்க்கம், தரச மார்க்கம், நேச மார்க்கம், ஞான மார்க்கம் எனவும் பல கூறுவராயினும், யான் யாதும் அறியேன் என்பாராய், “வகை யறியேன்” என்றும், அறியாமைக்குக் காரணம் எனது அறிவின் சிறுமை என்றற்குச் “சிறியேன்” என்றும் கூறுகின்றார். சத்தாகிய சிவத்தை யடையும் நன்னெறி சன்மார்க்கம் எனப்படும். சத்மார்க்கம் - சன்மார்க்கம் என வருகிறது; சித் முத்திரை, சின்முத்திரை - என வருவது போல. சன்மார்க்கத்தின் மாண்பு சிவஞான சிவபோகங்களைப் பெறுவதாய், பெறும் முயற்சி உயர்ந்த தவமாய் விளங்குவது பற்றிச் “சன்மார்க்கம் மேவும் மாண்புடைய பெருந் தவத்தோர்” என்று புகழ்கின்றார். மாண்புடைய பெரியோர்கள் கண்டு பாராட்டி மகிழ வாழ்வதுதான் வாழ்க்கைக் கழகு தருவதாக, யான் அது தானும் அறியேனென்பார். “பெருந் தவத்தோர் மகிழ வாழும் தகை அறியேன்” எனவுரைக்கின்றார். தகை, அழகு; மேன்மையுமாம். நலம், நல்வாழ்க்கையால் உளதாகும் நன்மைகள். நலமறியேனாதலால் “வாழும் தகை யறியேன்” என இயையும். தாம் மேற்கொண்டிருக்கும் வாழ்க்கை நிலை கூறலுற்று, “பொய்ம்மை யறிவேன் நல்லோரைச் சலம் செய்கின்ற மிகையறிவேன், தீங்கென்ப எல்லாம் இங்கே மிக அறிவேன்” என வுரைக்கின்றார். பொய்ம்மை, பொய் பேசித் திரியும் செயல். நல்லோர், நற்குண நற்செய்கைகளையுடையவர்கள். சலம், வஞ்சனை; “சலம் பற்றிச் சால்பில செய்யார்” (குறள்) என வருதல் காண்க. மிகை, குற்றம்; அறமோ பொருளோ எதனையும் மிகைபடச் செய்வது குற்றமாய் விளைதலின், குற்றம்மிகை யெனப்படுகிறது. தீங்கு, தீவினை. அறிவும் அறியாமையும் எவரிடத்தும் உண்டாதலால், முதற்கண் அறியாதன கூறிய வடலூர் வள்ளல் அறிவன எனப்பொய்ம்மை முதலியவற்றைக் கூறுகின்றார். அறியப் படாத நலங்களிலும் அறிந்துள்ள குற்றங்கள் பலவாதல் பற்றி, என்னைக் கைவிடலாகாது என்பாராய், “எனினும் எனை விடுதியாயின்” எனவும், விடுவாயாயின், யான் நின்பால் பகை கொண்டு தற்கொலை புரிந்து நீ இரக்கமில்லாதவன் என உலகோர் பழிக்கச் செய்வேன் என்பாராய், “பகையறிவேன் நின் மீதில் பழி வைத்து இந்தப் பாவி உயிர் விடத் துணிவேன் என்று பேசுகின்றார். பாவ வினை மிக்கிருத்தலால் தமது உயிரை “இந்த பாவியுயிர்” என்றும், துணிந்தால் துணிந்ததைச் செய்தே தீர்வேன். அதனையும் இப்போதே சொல்லி விடுகிறேன் என்றற்கு “உயிர் விடத்துணிவேன் பகர்ந்திட்டேன்” என்றும் உரைக்கின்றார்.

     இதனால் அறியாதனவும் அறிந்தனவும் கூறி நல்லடிமைத் திறம் வேண்டியவாறாம்.

     (7)