2706.

     படிமேல் அடியேன் உனைஅன் றிஓர்பற்றி லேன்என்
     முடிமேல் அடிவைத் தருள்செய் திடமுன்னு கண்டாய்
     கொடிமேல் விடைநாட் டியஎண்கு ணக்குன் றமே
     பொடிமேல் விளங்குந் திருமே னிஎம்புண் ணியனே.

உரை:

      கொடியின் மேல் எருது உருவெழுதிய குணம் எட்டுடைய குன்று போலும் பெருமானே, திருநீறு அணிந்து விளங்கும் திருமேனியையுடைய புண்ணிய மூர்த்தியே, இவ்வுலகில் அடியவனாகிய எனக்கு உன்னைத் தவிரப் பற்றுக்கேடு இல்லையாதலால் எனது தலையின் மேல் உன்னுடைய திருவடியை வைத்து ஞானம் எய்துவிக்கத் திருவுள்ளம் செய்தருள்க. எ.று.

     இடபக் கொடி யுடையவன் என்பது பற்றிச் சிவபெருமானைக் “கொடிமேல் விடை நாட்டிய குணக்குன்றமே” என்றும் தன்வயத்தனாதல், முற்றறிவுடைமை முதலிய குணம் எட்டுடையவ னெனச் சிவாகமங்கள் ஓதுதலின் “எண் குணக் குன்றமே” என்றும் கூறுகின்றார். “கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. மேனி முற்றும் வெண்ணீறு சண்ணித் திருத்தலால் “பொடி மேல் விளங்கும் திருமேனிப் புண்ணியன்” எனவும், அவன்பால் தமக்குள்ள தொடர்பு விளங்க, “என் புண்ணியனே” எனவும் புகழ்கின்றார். படி - நிலவுலகம். கணந்தோறும் மாறும் இயல்புடைய உலகியலில் நிலைத்த பற்றுக்கோடு ஒன்று வேண்டியிருத்தலின், “படி மேல் அடியேன் உனையன்றி யோர் பற்றிலேன்” என்றும், அதற்கு இறைவன் திருவடி ஞானம் இன்றியமையாமை விளங்க, தமது தலைமேல் சிவன் சேவடி பொருந்த வேண்டுமென விழைகின்றாராதலால், “என் முடிமேல் அடி வைத்தருள் செய்திட முன்னுகண்டாய்” என்றும் இயம்புகின்றார். முன்னுதல் - மனத்தால் நினைத்தல். கண்டாய் - முன்னிலை அசை. “எம்மான் திருவடி என் தலை மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்” (திருவதிகை) என நம்பியாரூரர் உரைப்பது காண்க.

     இதனால் திருவடிப் பேறு வேண்டுகின்றமை காணலாம்.

     (2)