2707. புண்ணாம் மனம்சஞ் சலித்துள் ளம்புலர்ந்து நின்றேன்
அண்ணா எனைஆட் கொளவேண் டும்அகற்று வாயேல்
கண்ணார் களைகண் பிறிதொன் றிலைகள்ள னேனை
எண்ணா வினைஎன் செயுமோ இதற்கென்செய் வேனே.
உரை: அண்ணலே, மனம் சஞ்சலித்தலால் புண்பட்டு உள்ளம் வாழ வருந்தா நிற்கின்றேன்; ஆதலால் என்னை நீ ஆதரித்து ஆட்கொள்ள வேண்டுகிறேன்; கைவிடுவாயாயின் கண்ணிறந்த ஆதரவு உன்னையன்றி வேறு யாதும் எனக்கில்லை; கள்ள நினைவுகளுடையவனாகிய என்னைக் குறிக்கொண்டு என் வினைகள் என்ன துன்பங்களைச் செய்யுமோ; யான் என் செய்வேன். எ.று.
துயர நினைவுகளால் பலப்படப் பலகாலும் நினைவுற்றிருப்பார்க்கு மனநோய் மிகுவது பற்றி “மனம் சஞ்சலித்துப் புண்ணாம்” எனவும், அதனால் நெஞ்சில் இரக்கப் பண்பு குன்றுதலின், “உள்ளம் புலர்ந்து நின்றேன்” எனவும் புகழ்கின்றார். இறைவன் திருவருள் உண்டாகிய வழி மனநோய் நீங்கி நன்னினைவுகளால் தெளிவு பெறுதலால் எனை ஆட்கொள வேண்டும் என்று கூறுகின்றார். அருள் வடிவினனாதலால், இறைவனைக் “கண்ணார் களைகண்” என உரைக்கின்றார். “உள்ளேன் பிற தெய்வம் உன்னை யல்லாது உத்தமனே!” என்னும் கருத்தினராதலின் “களைகண் பிறிதொன்றிலை” என உரைக்கின்றார். கள்ள நினைவுகளை உள்ளத்திற் கொண்டு புறத்தே தோன்றாதபடி மறைத் தொழுகுபவன் என்றற்கு, “கள்ளனேன்” எனத் தம்மைப் பழித்துரைக்கின்றார். கள்ள நினைவு கொண்டு சொல்லுதலும் செய்தலும் தீவினையாய் வினை முதலைத் துன்புறுத்துவனாதலின், “கள்ளனேன் வினை யென்னா என் செய்யுமோ” எனவும், இறைவனருளா லல்லது வினை நீக்கம் உண்டாகாமை பற்றி, “இதற்கு என் செய்வேனே” என்று கையறவு படுகின்றார். வினையென்னா என் செய்யுமோ என இயைக்க.
இதனால், வினைக் கஞ்சித் திருவருளல்லது களைகணாவது பிறிதொன்றும் இல்லை என உரைத்தவாறாம். (3)
|