2708.

     செய்வேன் அவம்அன் றித்தவம் ஒன்றும்செய் தறியேன்
     நைவேன் பிழையா வும்பொறுத் தருள்நல்கு வாயேல்
     உய்வேன் அலதுய் வகைஇன் றுமன்றோங்கு கின்றாய்
     வைவேன் துதிப்பேன் உனைஎன் றும்மறந்தி லேனே.

உரை:

      தில்லையம்பலத்தில் உயர்ந்து விளங்குகின்ற பெருமானே, வீண் செயல்களைச் செய்வதன்றி பயன்படும் தவ வினைகளை ஒருசிறிதும் நான் செய்ததில்லை; அதனால் வருந்துகிறேன். நான் செய்துள்ள குற்றங்களைப் பொறுத்து நல்லருள் புரிகுவாயாயின் உய்தி பெறுவேனே யன்றி, வேறு உய்யுமாறும் எனக்கில்லை. வருத்தம் வந்தவிடத்து வைவதும், நலம் எய்திய விடத்து உன்னை துதித்துப் புகழ்வதும் செய்வேனாயினும், உன்னை எப்பொழுதும் மறப்பதில்லை. எ.று.

     தில்லையம்பலத்தில் கண் ஞான நடம் புரிந்து உயிர்த்தொகை யனைத்தும் புகழ்ந்து பரவ மேம்படுவது விளங்கக் கூத்தப் பெருமானை, “மன்று ஓங்குகின்றாய்” என்று பராவுகின்றார். அவம் - வீண் செயல். தவம் படும் செயல் பயனுள்ள வினைகளைச் செய்யாது அல்லாதவற்றைச் செய்பவன் அவலமுறுவர் என்பதுபற்றி, “நைவேன்” என்று கூறுகின்றார். ஒருவர் செய்த பிழையைப் பொறுத்தாலன்றி அருள் செய்வதற்கு உள்ளம் செல்லாதாகலின், “பிழை யாவும் பொறுத்தருள் நல்குவாயேல்” எனவும், அருட் பேற்றாலன்றி ஒருவர்க்கு உய்திப் பேறு இல்லை என்பதை வற்புறுத்தற்கு. “உய்வேனலது உய்வகை இன்று” எனவும் உரைக்கின்றார். துன்ப முற்றவிடத்து இறைவனை வைதுரைப்பதும். இன்ப மெய்திய விடத்துப் பாராட்டிப் புகழ்வதும் இறைவன்பால் உண்மை யன்புடையார் செயலாதலால், “வைவேன் துதிப்பேன்” என்று இயம்புகின்றார். வையும்போதும் துதிக்கும்போதும் இறைவனுடைய நினைவு நெஞ்சின் கண் நிலவுமாறு புலப்பட, “உன்னை யென்றும் மறந்திலேன்” என உரைக்கின்றார்.

     இதனால், துன்பயின்பங்கள் எய்துமிடத்தும் சிவபரம் பொருளைத் தாம் நெஞ்சின் கண் மறவாமை உரைத்தவாறாம்.

     (4)