2710.

     என்னே இனும்நின் அருள்எய் திலன்ஏழை யேனை
     முன்னே வலிந்தாட் கொண்டதின் றுமுனிந்த தேயோ
     பொன்னேர் அணி அம் பலத்தா டியபுண்ணி யாஎன்
     அன்னே அரசே அமுதே அருள் ஆண்ட வனே.

உரை:

      பொன்னால் அழகுற்ற தில்லையம்பலத்தில் ஆடுகின்ற புண்ணியப் பொருளாகியவனே, எனக்கு அன்னையே, அரசே, அமுதமே, அருளுருவாகிய ஆண்டவனே, ஏழையாகிய என்னை முன்பு வலிய வந்து ஆட்கொண்டதற்கு ஏதுவாகிய உனது அருள், இப்பொழுது வெறுத்து விட்டதா? என்னென்பது? இன்னும் எனது திருவருள் இன்பத்தை பெற்றிலேன். எ.று.

      பசும்பொன்னினால் வேயப்பட்ட தில்லையம்பலத்தை “பொன்னேர் அணியம்பலம்” என்று புகழ்கின்றார். சிவ புண்ணியப் பொருளாய் விளங்குவது பற்றிப் “புண்ணியா” என்று புகழ்கின்றார். அருளே திருமேனி உடையவனாதலின் இறைவனை “அருள் ஆண்டவனே” என வுரைக்கின்றார். உலகியலறிவு வந்து படிவதற்கு முன் இளமையில் இறைவன் திருவருளுணர்வு தந்து ஆண்டமை நினைப்பித்தற்கு “ஏழையேனை முன்னே வலிந்தாட் கொண்டது” என்றும், பின்னும் அத்திருவருள் ஞானம் உள்ளத்தில் நின்று நிலவுதல் வேண்டி “இன்று முனிந்ததேயோ” என்றும் உரைக்கின்றார். முனிவு தோற்றுவித்தற்கு ஏற்ற தவறு ஒன்றும் தாம் செய்திலாமை யெண்ணிக் கூறுதலால் “என்னே” என்றும், இளமை கழிந்த இக்காலத்தும் திருவருள் ஞானம் எய்தாமை நினைந்து “இன்னும் நின்னருள் எய்திலன்” என்றும் இயம்புகிறார். முனிவு - வெறுப்பு.

     இதனால் திருவருள் ஞானம் விளங்க எய்தாமைக்கு முறையிட்டவாறாம்.

     (6)