2711. ஆண்டாய்எனைஏழ் பிறப்பும் உனைஅன்றி ஒன்றும்
தீண்டா தெனதுள் ளம்என்றால் என்சிறுமை தீர்க்க
வேண்டா தயலார் எனக்காண் பதென்மெய்ய னேபொன்
ஆண்டாள் திருஎய் தநஞ்சைக் களம்நாட்டி னோயே.
உரை: மெய்மை உருவாயவனே, பொன்னுலகத்தை ஆள்கின்ற இந்திரன் முதலிய தேவர்களை சாவா நலம் பெறக்கடல் விடத்தை உண்டு நெஞ்சில் நிறம் திகழ அமைத்துக் கொண்டவனே. எழு பிறப்பும் அடிமையென என்னை நீ ஆண்டு கொண்டாய்; உன் திருவருளை யன்றி வேறு எதனையும் என் மனம் நினைத்தல் செய்யாது; அங்ஙனமிருக்க, எனக்குண்டாய துன்பத்தை போக்க நினைந்தருளாது, அயலவன் போலப் புறக்கணித்து நோக்குவது முறையாகாது. எ.று.
பொன் னாண்டான் - பொன்னுலகம் எனப்படும் தேவருலகத்தை ஆள்கின்ற இந்திரன். தலைமை பற்றி இந்திரனைக் கூறுகின்றாராதலின் ஏனைத் தேவர்களும் கொள்ளப்பட்டனர். கடல் கடைந்து சாவா மருந்தாகிய அமுதம் பெற்றமையின் தேவர்கள் திருவெய்த எனவும், அக்கடலில் தோன்றிய விடத்தை உண்டு கழுத்துக் கரியதானது பற்றி “நஞ்சைக் களம் காட்டினோய்” எனவும் கூறுகின்றார். உயிர் வகைகள் அனைத்தும் உலகில் தோன்றியபோது இறைவனுக்கு அடிமையானதாலும் அவற்றின் பிறப்பு வகை ஏழாதலாலும், “எனை ஏழ் பிறப்பும் ஆண்டாய்” என வுரைக்கின்றார். பெருமானது திருவருளைப் பெறுதலிலேயே ஒன்றி யிருப்பது தோன்ற “உனையன்றி ஒன்றும் தீண்டாது எனதுள்ளம்” என்று இயம்புகின்றார். அறிவைச் சிறுமைப் படுத்துவது பற்றித் துன்பத்தைச் “சிறுமை” என்கிறார். வேண்டுதல் - விரும்புதல். திருவருள் ஞானம் எய்தாமை பற்றி, “அயலா னெனக் காண்பது என்” எனச் சொல்லுகிறார். என்றும் உள்ள பொருளாதலின், சிவபரம் பொருளை “மெய்யனே” என்று பரவுகின்றார். நித்தன் என்பதும் இப்பொருள் படுவதாகும்.
இதனால் தமது சிறுமையை விரைந்து தீர்த்தருள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டவாறாம். (7)
|