2712. நாட்டார் நகைசெய் வர்என்றோ அருள் நல்கி லாய்நீ
வீட்டார் நினைஎன் னினைப்பார் எனைமேவி லாயேல்
தாட்டா மரைஅன் றித்துணை ஒன்றும்சார்ந் திலேன்என்
மாட்டா மைஅறிந் தருள்வாய் மணிமன்று ளானே.
உரை: மணிகள் இழைத்த பொன்னம்பலத்திலுள்ள பெருமானே, நாட்டிலுள்ளவர்கள் கண்டு எள்ளி நகையாடுவர் என்று கருதியோ நீ எனக்குத் திருவருள் நல்காதொழிகின்றாய்; என்பால் அருள் கொள்ளாயாயின் முத்தி வீட்டிலுள்ள பெருமக்கள் நினது செயல் நோக்கித் தமக்குள் என்னை நினைப்பார்கள்? உனது திருவடித் தாமரைகள் அன்றி வேறு ஒன்றையும் நின் உயிர்த் துணையாக நான் கருதுவதில்லை; எனது இந்த மாட்டாமை யறிந்து திருவருள் வழங்குவாயாக. எ.று.
அழகுறுத்தற் பொருட்டு, இடையிடையே மணிகள் பதித்த பொற்சபையாதலால் சிவபிரான் நின்று ஆளுகின்ற திருச்சிற்றம்பலத்தை “மணி மன்று” என்று குறிக்கின்றார். வந்து வழிபடுவார்க்கு மன்றிலாடும் பெருமானாகக் காட்சி தருதலின், “மன்றுளானே” என்கின்றார். எனது எளிமையும் புன்மையும் ஒருபாலும், உனது அருமையும் பெருமையும் ஒருபாலும் நோக்குவோர் எனக்கு நீ திருவருள் வழங்குதல் கண்டு இகழ்வர் என்று எண்ணி எனக்கு அருள் செய்யாதிருக்கின்றாய் போலும் என்பாராய், “நாட்டார் நகை செய்வர் என்றோ நீ அருள நல்கிலாய்” எனவும், பேரருளாளனாகிய பெருமான் தன்னைச் சரண் அடையும் ஆன்மாவின் சிறுமைகளை நோக்கி அருளாமையும் உண்டு போலும் என நினைப்பாரன்றோ என்பார், “எனை மேவிலாயேல் வீட்டார் நினை என் நினைப்பர்” எனவும் இயம்புகின்றார். வீட்டார் - வீடு பேறு பெற்ற முத்தான்மாக்கள். மேவுதல் - விரும்புதல். தாட் டாமரை - திருவடிகளாகிய தாமரை மலர். மலர் போலும் திருவடி யென்பது பொருள். நின் திருவடியன்றி எனக்குப் பற்றுக் கோடாகும் சார்பு வேறில்லை என வற்புறுத்துவார், “துணை யொன்றும் சார்ந்திலேன்” என்றும், அதற்குக் காரணம் எனது சார மாட்டாமை என்றற்கு “மாட்டாமை அறிந்தருள்வாய்” என்று உரைக்கின்றார். மாட்டாமை - இயலாமை. இப்பாட்டு, “தாட் டாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி நாட்டார் நகை செய்ய நாம் வேலை வீடெய்த ஆட்டான் கொண்டாண்டவா பாடுதுங் காண் அம்மானாய்” என்ற திருவாசகத்தை நினைப்பிப்பது காண்க.
இதனால் திருவடி யன்றிப் பிறிது ஒன்றையும் தேர்ந்து அறிந்து சாரமாட்டாமை தெரிவித்தவாறாம். (8)
|