2713. மன்றா டியமா மணியே தனிவான வாஓர்
மின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன்
பொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று
நன்றாய் இரவும் பகலும் உனைநாடும் ஆறே.
உரை: தில்லையம்பலத்தில் ஆடல் புரிகின்ற பெரிய மாணிக்க மணி போன்ற பெருமானே, ஒப்பற்ற தேவனே, மின் போல் ஒளிரும் சடையை முடியிலே யுடைய வேத முதல்வனே, நின்பால் கெடாத மெய்யன்புடைய அடியவர்க்கு மனத்தால் அன்பு செய்து அவர் வழி நின்று இரவும் பகலும் நன்றாக உன்னையே நினைந்தொழுகும் திறத்தினை எனக்கு அருளுமாறு உன்னை வேண்டுகின்றேன். எ.று.
மணி மன்றில் நின்றாடும் கூத்தப் பெருமானையே நினைந்து பாடுதலின் “மன்றாடிய மாமணியே” எனவும், தேவர்களுக்கே அறியாத தேவனாதல் பற்றி, “ஓர் தனிவானவர்” எனவும், வானத்தின் மின்னல் கொடி போல விளங்குதலால் சிவனது திருமுடிச் சடையை “மின்தாழ் சடை” எனவும், வேத முதல்வனாதலால், “வேதியனே” எனவும் புகழ்கின்றார். பொன்றுதல் - கெடுதல். மெய்யுணர்வால் பேரன்பு செலுத்தம் திருத்தொண்டர்களை “மெய்யன்பர்” என்று குறிக்கின்றார். முத்தியிலும் சிவத்தோடு ஒன்றி உடனாயிருத்தல் பற்றித் தொண்டர் பெருமக்களை, “பொன்றாத மெய்யன்பர்” என்பது பொருத்தமாக உளது. சிவத்தொண்டரையும் சிவ மெனவே தேறி வழிபடுதல் சிவஞானச் செந்நெறியாதலால் மெய்யன்பருக்கு “அன்பு பூண்டு நின்று” என்று முற்பட மொழிகின்றார். அல்லும் பகலும் இடையறவின்றிச் சிவனை நினைந்தொழுகுவது மெய்த்தொண்டர் இயல்பாதலால் அவரோடு ஒப்ப யானும் அது செய்தலை விரும்புகின்றேன். அதற்குரிய நன்ஞான நல்லொழுக்கம் தனக்கு அடைய வேண்டுமென விழைகின்றமை புலப்படுத்தற்கு “நன்றாய் இரவும் பகலும் உனை நாடுமாறு நினை வேண்டுகின்றேன்” என உரைக்கின்றார்.
இதனால், இரவும் பகலும் இடையறவின்றி இறைவனை நினைந்தொழுகும் திறம் அருளுமாறு முறையிட்டவாறாம். (9)
|