2714. மாறா மனமா யையினால் மதிமாழ்கி மாழ்கி
ஏறா மல்இறங் குகின்றேன் இதற்கென் செய்வேன்
தேறா வுளத்தேன் றனைஏ றிடச்செய்தி கண்டாய்
பேறா மணிஅம் பலமே வியபெற்றி யானே.
உரை: பெருஞ் செல்வமாகிய மணி மன்றத்தில் கூத்தாடல் விரும்பிய தன்மையையுடைய பெருமானே, மாறுதலில்லாத மனமயக்கத்தினால் அறிவு மயங்கி மயங்கித் தெளிவாகிய கரையேற மாட்டாமல் மேன் மேலும் மயக்கத்தில் ஆழ்கின்றேனாதலால் இன்னது செய்வ தென்றறியாமல் வருந்துகின்றேன்; இவ்வாறு தெளிவு பெறாத மனத்தையுடைய என்னைத் திருவருள் ஞானமாகிய கரையேற அருளுக. எ.று.
அருட் செல்வமாகிய பொன்னம்பலம் என்றற்கு “பேறா மணியம் பலம்” என்று சிறப்பிக்கின்றார். அம்பலத்தில் என்று விருப்புடன் ஞானநடனம் புரிதல் பற்றி, “அம்பலம் மேவிய பெற்றியானே” எனவுரைக்கின்றார். பெற்றி - தன்மை. மனமாகிய கருவி மாயா காரியமாதலால் அதனிடத்து உளதாகும் மயக்கத்தில் மனமாயை, கணந்தோறும் மாறும் இயல்புடைய குணங்களால் தெளிவும், கலக்கமும், மயக்கமும் எய்துவது பற்றி “மாறா மனமாயை” என்று சொல்லுகின்றார். மயக்கத் தன்மை பெரிதாதல் பற்றி “மாழ்கி மாழ்கி” என அடுக்கி உரைக்கின்றார். அறிவை ஆழ்த்துவது மயக்கத்திற்கும், உயர்த்துவது தெளிவு நிலைக்கும் இயல்பாதலும் பற்றி “ஏறாமல் இறங்குகின்றேன்” என்கிறார். மயக்கமும் தெளிவுமாகிய இயல்புகளை மாற்றும் வன்மை மக்களிடம் இல்லாமை நோக்கி, “இதற்கு என்செய்வேன்” எனக் கையறவு படுகின்றார். இக் கலக்க மயக்கங்களால் தெளிவுறாமை தோன்றத் தம்மைத் “தேறா வுளத்தேன்” எனவும், இஃது இறைவனது திருவருளாலன்றி எய்தாமை பற்றி “ஏறிடச் செய்தி கண்டாய்” எனவும் இயம்புகின்றார்.
இதனால் மனமாயை நீங்கித் திருவருள் ஞானக் கரையேறுதற்கு அருள் செய்க என வேண்டிக் கொண்டவாறாம். (10)
|