2715.

     ஆனே றிவந்தன் பரை ஆட் கொளும்ஐய னேஎம்
     மானே மணிமன் றில்நடம் புரிவள்ள லேசெந்
     தேனே அமுதே முதலா கியதெய்வ மேநீ
     தானே எனைஆண் டருள்வாய் நின்சரண் சரணே.

உரை:

      எருதின் மேல் இவர்ந்து வந்து, அன்பாராயினாரை ஆண்டருளும் தலைவனே, எங்கள் பெருமானே, மணி பதித்த பொன்னம்பலத்தில் கூத்தியற்றும் அருள் வள்ளலே, செந்தேனும் தேவாமுதும் பிறவுமாகிய தெய்வமே, அருள் கொண்டு நீயே எழுந்தருளி என்னை ஆட்கொள்க; நின் திருவடியே எனக்குப் புகலிடமாகும். எ.று.

     தில்லையம்பலத்துக் கூத்தப்பெருமானை நோக்கித் திருவருள் புரிய வேண்டி முறையிடுகின்றாராதலால் “மணி மன்றில் நடம்புரி வள்ளலே” என்றும், சிவபெருமான்பால் தமக்குள்ள ஆர்வ மிகுதி புலப்பட, “எம்மானே, செந்தேனே அமுதே முதலாகிய தெய்வமே” என்றும் பாராட்டுகின்றார். தன்னிடத்து மெய்யன்புடையராகிய அடியார்களை யருளுதற்கு அறவுருவாகிய எருதின் மேல் இவர்ந்து போந்து அருள் செய்யும் இயல்பு குறித்து, “ஆனேறு இவர்ந் தன்பரை ஆட்கொளும் ஐயனே” எனவும், அவ்வியல்பினால் அடியேனையும் நீயே வந்து திருவருள் வழங்குதல் வேண்டும் என்பாராய், “நீ தானே எனை ஆண்டருள்வாய்” எனவும் வேண்டுகின்றார். சிவனைத் தவிர தனக்குப் புகலாவது வேறொன்றுமில்லை என வற்புறுத்தற்கு “நின் சரண் சரணே” என்று கூறுகின்றார்.

     இதனால், இறைவன் தானே உவந்தருளித் திருவருள் ஞானம் நல்க வேண்டுமென விண்ணப்பித்தவாறாம்.

     (11)