14

14. பொதுத் தனித் திருவெண்பா

 

      அஃதாவது பொது வகையில் பல கருத்துக்களைத் தனித்தனி பாடித் தொகுக்கப்பட்ட வெண்பாத் தொகுதி.

 

      இதன்கண் பாசப் பிணிப் பியல்பும், திருவருள் நோக்கச் சிறப்பும், திருவருள் ஞானத்தின் இன்றியமையாமையும், சிவனை அறுகு கொண்டருச்சிப்பதன் நலமும், இறைவன் புகழை யோதுவ தொன்றே எல்லாப் பேற்றுக்கும் வாயிலாம் திறமும், சிவனடி சேரும் செந்நெறி மாண்பும் பிறவும் ஒருபாலாக, வாட்டம் கண்டு வாளா இருத்தல் அருள் நெறியாகாதென்பதும், செய்பிழையினும் அருட் பெருமை பெரிதென்பதும், பிறவித்துன்பம் பொறுக்க மாட்டா தென்பதும், திருவருட் பேற்றுக்குத் தவம் புரியாமை நினைந்து வருந்துவதும் சிவனை வணங்கக் கல்லாமைக்கு வருந்துவதும், துன்பத்தின் நீங்கி அமைதி பெற ஒரு மந்திரம் நல்குக என்பதும் பிறவும் தனித்தனியாகப் பாடப்படுகின்றன.

 

நேரிசை வெண்பா

2716.

     வந்திக்கும் மெய்யடியார் மாலற்ற ஓர்மனத்தில்
     சந்திக்கும் எங்கள் சயம்புவே - பந்திக்கும்
     வன்மலக்கட் டெல்லாம் வலிகெட் டறநினது
     நின்மலக்கண் தண்ணருள்தான் நேர்.

உரை:

      எப்போதும் வழிபடுகின்ற மெய்ம்மை யமைந்த அடியார்களின் மயக்கற்ற சிந்தையின்கண் எழுந்தருளும் தான்தோன்றியாகிய சிவபெருமானே, உயிரறிவைப் பிணிக்கின்ற வலிய மலம் காரணமாக எய்தியபாசப் பிணிப்பனைத்தும் வலியழிந்து கெடுமாறு நினது தூய கண்களிடத் தொழுகும் தண்ணிய திருவருளைச் செய்தருள்க. எ.று.

     உண்மை ஞானம் நிறைந்து மெய்ம்மை யொழுக்கத்தால் மேம்படும் சிவத் தொண்டர்கள் எக்காலமும் சிவ வழிபாட்டில் தோய்ந்திருக்கும் இயல்பினராதலால், அவர்களை “வந்திக்கும் மெய்யடியார்” எனச் சிறப்பிக்கின்றார். வந்தித்தல் - வந்தனம் என்ற வடசொல் லடியாக வந்த வினைச்சொல். மொழி வேறுபாடு கண்டும் காய்தல் உவத்தலின்றி யாவரும் வழங்கத் தக்க செம்மொழி யென்ற சான்றான்மை நிலவிய காலத்தவராதலின், வடசொற்களை வள்ளற்பெருமான் இனிது பெருக வழங்குகின்றார். பிற்காலத்தே தோன்றிய பார்ப்பனர் சிலர் தமிழ் தனி மொழியன்று; வடமொழியின் வழித் தோன்றியது எனப் பொய் வழக்கிட்டுக் கற்றவர் மனத்தைப் புண்படுத்தினமையின், வடமொழியை விலக்கும் மனப்பான்மை தோன்றித் தமிழறிஞரிடத்தே வலி பெறுவதாயிற்று. “வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வருமேல் வினையோடு பந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன்” (அண்ணா) என ஞானசம்பந்தர் வழங்குதல் காண்க. மால் - மயக்கம். அஃதாவது பாசக் கலப்பால் மனத்தின்கண் உளதாவது. வந்தனை - வழிபாடுகள். பதிஞான நல் வினைகளாய் மால் விளைவிக்கும் பசுபாச வினைகளைப் போக்கும் மருந்தாகலின், “வந்திருக்கும் மெய்யடியார் மாலற்ற மனம்” என வுரைக்கின்றார். அப் பெருமக்களை மெய்கண்டாரும், “மாலற நேயம் மலிந்தவர்” (சிவ. போ. 12) என்று குறிப்பது அறிக. கலக்க முறாத ஒருமை மனம் என்றற்கு “ஓர் மனம்” என்கின்றார். சந்தித்தல், நேர்படுதல். மெய்யடியார் திருவுள்ளத்தில் எழுந்தருளி அருட்காட்சி நல்குவதுபற்றி, சிவனை, “மனத்தில் சந்திக்கும் எங்கள் சயம்புவே” எனப் போற்றுகின்றார். சயப்பு - பிறர் தோற்றுவிப்பதின்றித் தானே தோன்றிய மெய்ப்பொருள். “மெய்ந்நெறிக் கேதக்கிருந்தார் ஆக்கூரில்தான் தோன்றி மாடம்” என வருவது காண்க. பந்திக்கும் வன்மலக்கட்டு - பிணித்திருக்கும் வன்மையான மலமாயை கன்மங்களான பாசக் கட்டு, இவற்றுள் மலபந்தம் அனாதியாய் நீக்கற் கரிதாய இயற்கைப் பிணிப்பு என்றும், அது காரணமாக மாயை கன்மங்களின் தொடர்பும் பிணிப்பும் ஏற்பட்டமையின் அவற்றைச் செயற்கைப் பிணிப்பு என்றும் அறிவு நூல்கள் கூறுகின்றன. அவற்றின் வன்மை கெட்ட வழி, உயிரறிவைச் சுருக்கி மறைக்கும் செயலறுதலால், “வன்மலக் கட்டெல்லாம் வலி கெட்டற” என வுரைக்கின்றார். நோன்மையால் மன முதலியவற்றின் எத்தகைய தொடர்பும் இல்லாத தூயனாதலால் இறைவனது திருவருள் நோக்கத்தை “நினது நின்மலக் கண்ணின் அருள்” எனவும், தண்ணிய ஞானவொளி செய்வது பற்றித் “தண்ணருள்” எனவும், சிறப்பித்து, மல நீக்கமும் திருவருள் ஞானப் பேறும் எனக்கு உண்டாகத் திருவுள்ளம் பற்றுக என்பார், “நேர்” என்று கூறுகின்றார்.

     இதனால், பாசப் பிணிப்பின் இயல்பும் அதனை நீக்க வல்ல திருவருள் நோக்கத்தின் இயல்பும் செயலும் தெரிவித்தவாறாம்.

     (1)