2718.

     நீலக் களங்கொண்ட நீடொளியே நீள்கங்கை
     கோலச் சடைக்கணிந்த கோமளமே - ஞாலத்தில்
     அந்தோ சிறியேன் அருளின்றி வாடுவது
     சந்தோட மோநின் றனக்கு.

உரை:

      கரிய கழுத்தையுடைய நெடிய ஒளிப் பிழம்பாகிய சிவபிரானே, நீண்ட கங்கை யாற்றை அழகிய சடையில் தாங்கிக் கொண்ட அழகனே, நிலவுலகில், ஐயோ, சிறுமையுடையவனாகிய யான் நினது திருவருளறிவு பெறாமல் வாடுவது நினக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ? கூறுக. எ.று.

      நீலம் - விடத்தால் உளதாகிய கருமை நிறம். சுடர் விட்டொளிரும் சோதியுருவினனாதலால், சிவனை, “நீடொளியே” எனப் பராவுகின்றார். “சோதியே சுடரே சூழொளி விளக்கே” (அருட்) என்பது திருவாசகம். நெடிய வானத்தினின்றும் போந்தமையால், கங்கை யாற்றை, “நீள் கங்கை” என்று கூறுகின்றார். நீண்டு பெருகிப் போந்த கங்கையை மேற் செல்லாவாறு சடைக்கண் தாங்கி யடக்கிக் கொண்டமையால், “கோலச் சடைக்கணிந்த கோமளமே” என்று உரைக்கின்றார். கோமளம் - அழகு. சிறியேன் - அறிவாற் சிறுமையுடையேன். திருவருள் ஞானமுள் வழி எங்கும் யாவும் சிவமாய்க் காட்சி தந்து இன்புறுத்துமாகலின், “அருளின்று வாடுவது” என அறைகின்றார். இரக்க முறுவதை விடுத்து வாளா இருப்பதாக எண்ணுகின்றமை புலப்பட, “சந்தோடமோ நின்றனக்கு” எனச் சாற்றுகின்றார். சந்தோஷம் - சந்தோடம் என வந்தது; வடசொற்றிரிபு.

     இதனால், நிலவுலகுக்கு எய்தும் இடர் கண்டு கங்கையைத் தாங்கிய அருளாளனாகிய நீ, என் வாட்டம் கண்டு வாளா விருப்பது அருள் நெறியாகாதென முறையிட்டவாறாம்.

     (3)