2720. ஆவித் துணையேஎன் ஆரமுதே நின்வடிவைப்
பாவித்துள் நையேன்இப் பாவியேன் - சேவித்து
வாழ்த்தேன்நின் பொன்னடியில் வந்தென் தலைகுனித்துத்
தாழ்த்தேன்என் செய்தேன் தவம்.
உரை: என் உயிர்த் துணையே, யான் பெறற்கரிய அமுதமானவனே, நின் தெய்வவுருவை மனத்தின்கண் சிந்தித்து மெலிகின்றேன்; பாவியாகிய யான் ஞானத் தெளிவு பெறுதற்கு எத்தவமும் செய்தேனில்லை; நின்னை வணங்கி வாழ்த்தினேனில்லை; நின் அழகிய திருவடித் திருமுன் வந்து தலைவணங்கி வழிபடுவதும் செய்தேனில்லை. எ.று.
உயிர்க்குயிராய் அறிவின்கண் அருளுடன் அமர்வது பற்றிச் சிவபரம் பொருளை, “ஆவித் துணையே” என்றும், நினைக்குந்தோறும் நினைவில் தேனூற நிற்பதால், “என் ஆரமுதே” என்றும் இயம்புகின்றார். சிவமூர்த்தத்தை “நின் வடிவு” என்று குறிக்கின்றார். அதனைச் சிந்தையில் வைத்துத் தியானிப்பது பாவனையாகும். சிவ வடிவைச் சிந்தையிற் கொண்டு நினைந்து நினைந்து உள்ளம் உருகுவது திருவருட் டவமாகும்; அதனை யான் செய்யவில்லை யென்பாராய், “நின் வடிவைப் பாவித்து உள் நையேன்” என வுரைக்கின்றார். இதனைச் செய்யாது வெறும் பாவமே செய்தேன் என்பார், “பாவியேன்” என்று தம்மை நொந்து கொள்ளுகிறார். சிவ வருட் பாவனை செய்யா தொழியினும், சிவனது திருமுன் பணிந்து சேவித்து வாயால் வாழ்த்துவதும், திருவடியில் தலை குனிந்து அடியற்ற மரம்போல் வீழ்ந்து வணங்குவதும் செய்தேனில்லை எனப் புலம்புவாராய், “சேவித்து வாழ்த்தேன், நின் பொன்னடியில் வந்து என் தலைகுனித்துத் தாழ்த்தேன்” என்றும், சிவஞானப் பேற்றுக்குரிய இத் தவங்களைச் செய்யாமை தோன்ற, “தவம் என் செய்தேன்” என்றும் இரங்குகின்றார்.
இதனாற் சிவ வழிபாடாகிய திருவருள் ஞானத் தவம் செய்யாமை நினைந்து வருந்தியவாறாம். (5)
|