2721. உன்னைநினைந் திங்கே உலாவுகின்றேன் அன்றிஎந்தாய்
பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன் - என்னை
விடாதேநின் பொன்னடியை மேவார்சேர் துன்பம்
கொடாதே எனைஏன்று கொள்.
உரை: எந்தையே, இவ்வுலகில் உன்னையே நினைந்து கொண்டு வாழ்கின்றேனேயன்றி, வேறே நினைப் பொன்றும் கொண்டுள்ளேனில்லை; ஆதலால் என்னைக் கைவிடாதே; நின்னுடைய அழகிய திருவடியை விரும்பாதவர்கள் அடையும் துன்பத்தை யான் அடையாதவாறு என்னை ஏற்றருள்வாயாக. எ.று.
சிவனையே எண்ணுவதும், அவனது திருவருள் ஞானத்தையே சிந்திப்பதுமே தொழிலாகக் கொண்டு வாழ்கின்றேன் என வுரைக்கின்றாராதலால், “உன்னை நினைத்திங்கே யுலாவுகின்றேன்” எனக் கூறுகின்றார். “இங்கே” என்பதன் ஈற்றேகாரம் பிரித்துக் கூட்டப்பட்டது. திருவருளையன்றி உலகியல் வாழ்க்கைக்குரிய பொருள் வகைகளை எண்ணாமை தோன்ற, “பின்னை நினைப்பொன்றும் பெற்றிலேன்” எனப் பேசுகின்றார். விடுதல் - கைவிடுதல். இறைவன் திருவடியை விரும்பாதவர் பல்வேறு மனக்கவலைகட் கிரையாகித் துன்பம் அடைவது பற்றி, “பொன்னடியை மேவார் சேர் துன்பம்” எனவும், அத்தகைய துன்பம் தனக்கு எய்தலாகாது என்பாராய், “துன்பம்கொடாதே எனை
ஏன்று கொள்” எனவும் எடுத்துரக்கின்றார். ஏற்றுக் கொள் என்பது ஏன்று கொள் என வந்தது.
இதனால், இறைவனை நினையாது வேறு பொருள்களை நினைந்து துன்ப மடைதலாகாது எனத் தெரிவித்தவாறாம். (6)
|