2723.

     அன்னேஎன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் ஆதரவே
     என்னேநின் உள்ளம் இரங்கிலையே - பொன்னே
     உடையா ரிடைஎன் உளநொந்து வாடிக்
     கடையேன் படுந்துயரைக் கண்டு.

உரை:

      என் அன்னையே, அப்பனே, என்னுடைய அரிய உயிர்க்கு ஆதரவானவனே, கடையவனாகிய யான் பொன்னும் பொருளுமுடைய செல்வரிடம் சென்று மனம் நொந்து வாடி வருந்துகிற துன்ப நிலையைக் கண்டும் இன்னும் திருவுள்ளம் இரங்குகின்றாயில்லையே; இதனை என்னென்பது. எ.று.

      உடலோடு கூடிய உயிர்க்கு அம்மையப்பனாகியும், உடலின் நீங்கிய ஆன்மாவாகிய உயிர்க்குப் புகலிமாயும் விளங்குமாறு, புலப்பட “அன்னே என் அப்பா என் ஆருயிர்க்கோர் ஆதரவே” என்று பரவுகின்றார். “புக்கிலமைந் தின்று கொல்லோவுடம்பினுள் துச்சில் இருந்த வுயிர்க்கு” (குறள்) என்பது காண்க. குணம் செயல்களாற் கீழ்ப்பட்டவன் எனத் தம்மைக் குறித்தற்குக் “கடையேன்” எனக் கூறுகின்றார். பொன்னுடையார், பொன்னும் பொருளும் உடைய செல்வர். பொன் மேலன்றிப் பிற மக்கள்பால் அன்பிலாராதலால், அவர்பாற் சென்று ஓருதவியும் பெறாது வருந்தினமை புலப்பட, “உடையாரிடை என் உளம் நொந்து வாடி” என்றும், “படுந்துய” ரென்றும் விரித்துரைக்கின்றார். உதவி யொன்றும் எய்தாமையின், “நின்னுள்ளம் இரங்கிலை” எனவும், அருளாளனாகிய உனது அருளுதவி எய்தாமை வியப்பைத் தருகிறது என்பார், “என்னே” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், அருளாமை வியப்பாக இருக்கிற தென முறையிட்டவாறாம்.

     (8)