2726. பொய்கண்டாய் காமப் புதுமயக்கிற் போய்உழலக்
கைகண்டாய் என்னபலன் கண்டாயே - மெய்கண்ட
பொன்னே அனையார்பால் போய்வணங்கக் கற்றிலையோ
என்னேநின் தன்மைமன மே.
உரை: மனமே, காம வின்பம் பொய் படுவதை நன்கறிந்தாய்; அது நல்கும் புதுமை மயக்கத்திற் புக்கழுந்தி வருத்த முறுவதையும் தெளிய அறிந்தாய்; நிலையாய பயன் யாது கண்டாய்; மெய் முழுதும் பொன்னே போன்ற சிவபெருமான் பக்கல் சென்று வணங்கி வழிபடும் திறத்தைக் கல்லாது ஒழிந்தாயே; நின்னுடைய தன்மையை என்னென்று சொல்லுவது. எ.று.
துய்த்த அக்கணத்தேயே நிலையின்றிக் கெடுவது பற்றிக் காமவின்பத்தைப் “பொய் கண்டாய்” எனவும் காமக்கூட்டம் நிகழுந்தோறும் புத்தின்பம் தந்து அறிவை மயக்குவதனால், “காமப் புதுமயக்கு” எனவும், பன்னாளும் பலகாலும் கூடி வருந்திப் பயின்றாய் என்பாராய், “புது மயக்கிற் போயுழலக் கைகண்டாய்” எனவும் எடுத்துரைக்கின்றார். “புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய் வளர்கின்றது” (9) எனத் திருக்கோவையார் கூறுவது காண்க. கைகாண்டல் - பன்னாள் பல்காற் பயிலும் அனுபவம். பொன்னிறத் திருமேனியுடையவன் சிவனாதலால், “மெய்கண்ட பொன்னே யனையார்” எனக் கூறுகிறார். “பொன் செய்த மேனியினீர்” (முதுகுன்) என்று சுந்தரர் பாடுவது காண்க. நெஞ்சார நினைந்து வாயாரப் போற்றி மெய்யார வணங்குதல் முறையாகவும், அதனைச் செய்யாமை புலப்பட, “வணங்கக் கற்றிலையோ” என்றும், கற்றற் குரியதைக் கல்லாமை குற்றமாதலின், “என்னே நின் தன்மை” என்றும் இயம்புகிறார்.
இதனால், காம மயக்கத்தில் ஆழ்ந்து பயின்றது போலச் சிவனை வணங்கக் கல்லாமைக்கு இரங்கியவாறாம். (11)
|