2727. இவ்வழியில் செல்லாதே என்னுடையான் தன்னடிசேர்
அவ்வழியில் செல்என் றடிக்கடிக்குச் - செவ்வழியில்
சொன்னாலும் கேட்கிலைநீ துட்டமன மேஉனக்கிங்
கென்னால் உறவே தினி.
உரை: துட்டத் தன்மையுடைய மனமே, துன்பம் தருவதாதலால் இவ்வழியிற் போகாதே; என்னை யுடையவனாகிய சிவபெருமான் திருவடிக்கண் கொண்டு சேர்க்கும் அந்த நல்வழியைப் பற்றிச் செல்வாயாக என அடிக்கடி நன்முறையிற் சொல்லிய போதும், நீ கேளாதொழிகின்றாய்; இனி, உனக்கு என்னோடு உறவில்லை, காண். எ.று.
துட்டத் தன்மை - தீது செய்து குற்றப்படும் தன்மை; வடமொழியில் துஷ்டத்தனம் என்பர். தீ நெறியின் தீமையைக் காட்டி விலக்கும் குறிப்பால், “இவ்வழியிற் செல்லாதே” என்று கூறுகிறார். என்னுடைய உடல் பொருள் உயிர் மூன்றையும் உடையவன் என இறைவனுக்கும் தனக்குமுள்ள தொடர்புணர்த்தற்கு, “என்னுடையான்” என இயம்புகின்றார். உடையவன் திருவடியை யடைவது உடைமையாயினார் கடனாதல் விளங்க, “உடையான் தன்னடி சேர் அவ்வழியிற் செல்” என்றும், வழுவாமைப் பொருட்டு அடிக்கடி வற்புறுத்தினமை தோன்ற, “அடிக்கடிக்குச் சொன்னாலும்” என்றும் இயம்புகிறார். கடுத்துச் சொன்னால் கேட்பவர் உள்ளம் வெறுப்புற்றுப் புறக்கணிக்குமாதலின், இன்னுரையால் மனம் கொள்ளக் கூறல் இன்றியமையாமையால், “செவ்வழியிற் சொன்னாலும்” எனவும், துட்டத் தன்மையால் கேளாமை கூறுவார், “கேட்கிலை நீ” எனவும், என் சொற் கேட்டு என் வழிச் செல்லாத உன்னோடு உறவு கொள்ளுதல் நலம் பயவா தென்பார், “உனக்கு இங்கு என்னால் உறவு ஏது” எனவும் இசைக்கின்றார். ஆலுருபு ஒடுவின் பொருளது. உறவு - உறுதற் கமைந்த தொடர்பு.
இதனால், சிவனடியே சேரும் செந்நெறி வற்புறுத்தப் பட்டவாறாம். (12)
|