2728. கால்வாங் கியஉட் கதவம் கொளும் அகத்தின்
பால்வாங் கியகால் பரம்பரனே - மால்வாங்
கரிதாரம் ஊணாதி யாம்மயல்கொண் டேழைப்
பெரிதார ஓர்மொழியைப் பேசு.
உரை: வாயிற் கால்கட்கு உட்புறமிருந்து இயங்கும் கதவைக் கொண்ட வீட்டைப் போல, ஒருபால் தடை யுண்ணும் மனத்தின்கண் செல்லாத திருவடிகளையுடைய பரம்பரனாகிய சிவனே, பெரியவாகிய பொன்னும் பொருளும் உணவும் பிறவுமாகியவற்றால் மயங்குதலுடைய ஏழையாகிய யான் மிகவும் அமைதி யுறுதற்கு ஒருசொல் சொல்லுவாயாக. எ.று.
வாயிற் காலுக்கு உட்புறம் நின்று மூடவும், திறக்கவும் அமைந்த கதவையுடைய வீடு கதவு திறக்கப் பட்டா லொழியப் புக முடியாத நிலைமைத்தாம்; அதுபோல் உட்கதவாக வுள்ளத்தை யுடைய மனத்தின்கண் உள்ளம் திறவா விடத்துச் செல்லாத திருவடியை யுடையவன் சிவபெருமான் என்பது கருத்து. இனி, உயிர்க் காற்று உள்ளும் புறமும் சென்று வருவதும் உள்ளமாகிய கதவை யுடையதுமாகிய மனத்தின்கண் செல்லாத திருவடியையுடைய பரம்பரன் என்று இதற்குப் பொருள் கூறுவதும் உண்டு. தியானத்துக்குத் திறவாமல் வெறும் உலகியல் நினைவுகள் போக்கு வரவு புரிதற்கும் அவற்றுக் கேற்ப மூச்சுக் காற்றுப் போக்கு வரவு புரிதற்குமாகிய உடம்பின்பால் உள்ள மனத்தினுட் புகாத திருவடியை யுடையவன் சிவபெருமான் என இதற்கு விளக்கம் விளம்புவர். மால் வாங்கு அரி - பெரிதாகிய பொன். தாரம் - பொருள்; மனைவி மக்களுமாம். ஊணாதி உண்பொருள் முதலியன பொன்னும் பொருளும் பிறவுமாகிய ஆசையை யுண்டு பண்ணி நல்லறிவை மயக்குதலால் சிறுமையுற்றுத் துன்புறுபவன் என்றற்கு, “மயல் கொண்ட ஏழை” எனக் கூறுகிறார். கொண்ட ஏழை என்பது கொண்டேழை என வந்தது. துன்பமின்றி மிகவும் மனவமைதி பெற ஒரு மந்திரம் உபதேசித் தருள்க என்பாராய், “ஏழை பெரிதார ஓர் மொழியைப் பேசு” என வேண்டுகிறார்.
இதனால், பொருள் மயக்கத்தால் புண்ணுற்று வருந்தும் ஏழையாகிய என் வருத்தம் நீங்கி அமைதி பெற நிறைமொழி யொன்று அறிவுறுத்த வேண்டிவாறாம். (13)
|