2731. ஆயிரங் கார்முகில் நீர்விழி நீர்தர ஐயநின்பால்
சேயிரங் கார்எனக் கென்றேநின் பொற்பதம் சிந்திக்கின்றேன்
நீஇரங் காய்எனில் என்செய்கு வேன்இந் நிலத்திற்பெற்ற
தாய்இரங் காள்என்ப துண்டோதன் பிள்ளை தளர்ச்சிகண்டே
உரை: ஐயனே, பல்லாயிரமாகத் திரண்ட மழை மேகங்களின் நீரை, என் கண்கள் சொரியச் சேய்மையில் இருத்தலால் எனக்கு இரங்கமாட்டார் சிவபிரானார் என்று நினது அழகிய திருவடிகளைச் சிந்தித்த வண்ண மிருக்கின்றேனாக, நீ அதனைக் கண்டும் திருவுள்ளத்தில் அருள் புரியாயாயின், யான் யாது செய்வேன்; இந்நிலவுலகில் தான் பெற்ற பிள்ளையின் தளர்ச்சி கண்டு தாய் மனம் இரங்க மாட்டாள் என்றற்கு இடமுண்டோ? கூறுக. எ.று.
ஆயிரம் - மிகுதி யுணர்த்தும் குறிப்பு மொழி. கார் முகில் - மழை மேகம். நின்பால் - நினது அருள் பெறும் பொருட்டு. சேய் - சேணிடம்; “பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்” (கோவை) எனச் சான்றோர் வழங்குவது காண்க. மிக்க சேணிடத் திருத்தலால் எங்ஙனம் கண்டு
இரங்கியருளப் போகின்றார் எனக் கருதி நாளும் நின் திருவடிகளை நினைந்த வண்ணமிருக்கின்றேன் என்பார், “சேய் இரங்கார் எனக்கென்று நின் பொற்பதம் சிந்திக்கின்றேன்” எனவுரைக்கின்றார். அருளே யுருவாகிய நீ அருளாயின், வேறே யாரும் இல்லையாதலால் யானும் கையறவுற்று வருந்துகிறேன் என்றற்கு “என் செய்குவேன்” என்று கூறி, அருளா திருத்தல் அறமாகாது என வற்புறுத்தலுற்று, பிள்ளை வருத்தங் கண்டு மன முருகி இரக்கம் கொள்ளாத பெற்ற தாய் இல்லை என்ற உலகியல் முறையை, “இந்நிலத்திற் பெற்ற தாய் இரங்காள் என்பதுண்டோ தன் பிள்ளை தளர்ச்சி கண்டே” என விளம்புகின்றார்.
இதனால் திருவருள் பெறும் பொருட்டுக் கண்ணீர் சொரியும் எனக்கு அருளாமை முறையாகாது என விளம்பியவாறாம். (3)
|