எண

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

2732.

     செம்பவளத் தனிக்குன்றே அருளா னந்தச்
          செழுங்கனியே முக்கணுடைத் தேவே மூவா
     அம்புவிநீர் அனல்வளிவான் ஆதி யாய
          அரசேஎன் ஆருயிர்க்கோர் அரண மாகும்
     சம்புசிவ சயம்புவே சங்க ராவெண்
          சைலம்வளர் தெய்வதவான் தருவே மிக்க
     வம்பவிழ்மென் குழல் ஒருபால் விளங்க ஓங்கும்
          மழவிடைமேல் வருங்காட்சி வழங்கு வாயே.

உரை:

      சிவந்த பவள நிறம் கொண்ட தனிக்குன்று போல்கின்ற பெருமானே, திருவருள் இன்பச் சுவை நிறைந்த செழுமையான பழமாய் இலங்குபவனே, கண்கள் முன்றுடைய தேவனே, முத்து விளிதலில்லாத நிலம், நீர், நெருப்பு, காற்று, வான் முதலியவற்றுக்கு ஆதி முதலாகிய அருளரசே, எனது அரிய உயிர்க்கு ஒப்பற்ற பாதுகாப்பாகிய சம்பு மூர்த்தியே, சிவமாகிய சயம்புவே, சங்கரனே, வெண்ணிறக் கயிலை மலையில் வளரும் தெய்வத் தன்மை கொண்ட பெரிய தேவதாருவே, மிக்க மணம் கமழ்கின்ற மெல்லிய கூந்தலையுடைய உமையம்மை ஒருபால் அமர்ந்திருக்க உயர்ந்த இளமை கொண்ட விடை மேல் இவர்ந்து வரும் இனிய காட்சியை எனக்கு அருள்வாயாக. எ.று.

      பவளம் செந்நிறத்த தாகவும், செம்பவள மென்றது இயற்கையடை. பவளக் குன்று போல் உயர்ந்து ஓங்கிய சிறப்பு பிறர் எவருக்கும் எங்கும் இல்லாமையால் “தனிக்குன்றே” எனக் கூறுகின்றார். அருள் நிறைந்து இன்பச் சுவை கனிந்துள்ளமை புலப்பட, “அருளானந்தச் செழுங்கனியே” எனச் சிறப்பிக்கின்றார். மூவாமை - மூத்து முதிர்ந்து கெடாமை. ஐம்பெரும் பூதங்கட்கும் ஆதியாய முதல்வனாதலால் “அம்புவி நீர் அனல் வளி வான் ஆதியாய அரசே” என அறிவிக்கின்றார். பூதங்களனைத்தையும் எல்லை கடவாவாறு ஆட்சி புரிவது பற்றி, “அரசே” எனல் வேண்டிற்று. உயிர்கள் உணர்வுருவினவாயினும் உணர்த்த உணரும் சிறுமை யுடையவாதலால், “ஆருயிர்க்கோர் அரணமாகும் சம்பு” என ஓதுகின்றார். சம்பு - சிவனுக்குரிய பெயர்களில் ஒன்று. சிவமூர்த்தம் சயம்புவாதலால் “சிவ சயம்புவே” என வுரைக்கின்றார், சங்கரன் - சுகமே செய்பவன். வெண்பனி மூடிய மலையாதல் பற்றிக் கயிலை “வெண் சயிலம்” எனப்படுகிறது. இமயச் சாரற் காட்டில் தேவதாரு மரங்கள் வளர்தலின் “வெண் சயிலம் வளர் தெய்வ வான் தருவே” என்பது இயற்கைக்குப் பொருத்தமாக வுளது. தெய்வம் - தெய்வதமென வந்தது. வம்பு - நறுமணம். உமையம்மையின் கூந்தல் இயல்பாகவே ஞான மணம் கமழ்வதாகலின், பொதுவாக “வம்பவிழ் மென்குழல்” எனவும், குழலையுடையாளைக் குழல் என்னும் வழக்குப் பற்றி “மென்குழல்” எனவும் இயம்புகின்றார். ஒருபால் என்பது ஈண்டு இடப்பாகத்தின் மேற்று. சிவபெருமானுடைய ஊர்தி என்றும் இளமை மாறாத எருதாகலின், “மழவிடை” எனப் புகழ்கின்றார். விடையை அறமாகவும், உமையம்மையை அருளாகவும், சிவத்தை ஞானமாகவும் கருதுபவாதலின், விடை மேல் உமை யமர்ந்து தோன்றும் சிவக்காட்சி காண்பார்க்கு ஞானவின்பம் தருதலால், “விடை மேல் வரும் காட்சி வழங்குவாய்” என வேண்டுகின்றார்.

     இதனால் இடப வாகனக் காட்சி விழைந்தவாறாம்.

     (4)