அறுச

அறுசீர் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2733.

     நீடுகின்ற மாமறையும் நெடுமாலும்
          திசைமுகனும் நிமல வாழ்க்கை
     நாடுகின்ற முனிவரரும் உருத்திரரும்
          தேடஅருள் நாட்டங் கொண்டு
     பாடுகின்ற மெய்யடியர் உளம்விரும்பி
          ஆநந்தப் படிவ மாகி
     ஆடுகின்ற மாமணியை ஆரமுதை
          நினைந்துநினைந் தன்பு செய்வாம்.

உரை:

      ஓதுந் தோறும் நீண்டு செல்கின்ற பெரிய வேதங்களும் நெடிய திருமாலும் நான்முகனும், தூய ஞான வாழ்வை நோக்குகின்ற முனிபுங்கவர்களும் உருத்திர கணத்தாரும் சிவத்தை தேடுவாராக, திருவருள் நாட்டம் பெற்றுப் பாடியே வழிபடுகின்ற உண்மை ஞான அடியவர் பலரும் உள்ளன்போடு விரும்பி இன்ப வடிவினராகி துதிக்கத் திருவம்பலத்தில் ஆடல் புரிகின்ற பெரிய மாணிக்க மணியும் கண்ணாரக் கண்டு பருகும் ஆரமுதுமாகிய சிவபெருமானை நாளும் பன்முறையும் நினைந்து அன்பு செய்வோமாக. எ.று.

      பன்னூறு ஆண்டுகளாக வழிவழி ஓதப்பட்டு வருதலால், வேதம் வல்ல வேதியர்களை “நீடுகின்ற மாமறை” என வுரைக்கின்றார். மறையவர் செயலை மறை மேலேற்றி, “மாமறை தேட” என்று கூறுகின்றார். நெடுமால் - காக்கும் தெய்வமான நாராயணன்; திசைமுகன், படைத்தற் றெய்வமான பிரமன்; இவனுக்கு முகம் நான்காதலால் “திசைமுகன்” எனப்படுகின்றான். தூய ஞானவாழ்வு, பிறவாப் பேரின்பத்துக்கு வாயிலாதலின் முனிபுங்கவர்களை “நிமல வாழ்க்கை நாடுகின்ற முனிவரர்” என்று உரைக்கின்றார். உருத்திரர், திருக்கோயில்களில் கூட்டமாய் நின்று சீருத்திரம் ஓதுபவர். இப்பெருமக்கள் திருவருட் காட்சி வேண்டிச் சிவத்தைத் தேடுகின்றன ரென்பாராய், மறை முதல் உருத்திரர் ஈறாகப் பலரும் “தேட” என்கின்றார். திருவருள் நாட்டம், திருவருளே கண்ணாக எப்பொருளையும் எவரையும் காண்பது. பாடுவதே அருச்சனையாகலின், “பாடுகின்ற மெய்யடியர்” எனப் புகழ்கின்றார். உண்மை ஞானத்தால் இறைவன் திருவடியே புகலென உணர்ந்தொழுகும் பெருமக்கள், “மெய்யடியர்” எனவும், அம்பலத்தில் கூத்தப் பெருமானுடைய ஆட எடுத்த பாதம் கண்டு இன்ப மயமாய்த் துதிக்கின்றாராதலின், “உளம் விரும்பி ஆனந்தப் படிவமாகி” எனவும், கூறுகின்றார். ஆக என்ற்பாலது ஆகி யென வந்தது. “ஆனந்தப் படிவமாகி ஆடுகின்ற” என இயைப்பினும் அமையும்; அந்நிலையில் ஆடுகின்ற என்பதற்கு ஆடுதற்கு ஏதுவாகின்ற மாமணி என ஏதுப் பொருளில் வந்த பெயரெஞ்சு கிளவியாகப் பொருள் கொள்க. மாமணி, பெரிய மாணிக்க மணி. நினைக்குந் தோறும் மெய்யன்பு ஊறிப் பெருகுதலால், “நினைந்து நினைந்து அன்பு செய்வாம்” என இயம்புகின்றார்.

      இதனால், மெய்யடியார் விரும்பி ஆனந்த பரவசராகும் கூத்தப் பெருமானை நினைந்து அன்பு செய்தல் வேண்டுமென விளம்பியவாறாம்.

     (5)