2734.

     மறைமுடி விளக்கே போற்றி
          மாணிக்க மலையே போற்றி
     கறைமணி கண்ட போற்றி
          கண்ணுதற் கரும்பே போற்றி
     பிறைமுடிச் சடைகொண் டோங்கும்
          மேரருட் குன்றே போற்றி
     சிறைதவிர்த் தெனையாட் கொண்ட
          சிவசிவ போற்றி போற்றி.

உரை:

      வேத நூல்களின் முடிவாகத் திகழும் சிவஞான விளக்கமே; மாணிக்க மணியாலாகிய மலை போல்கின்ற சிவனே; நீலமணி போலும் கழுத்தையுடைய பெருமானே; கண் பொருந்திய நெற்றியையுடைய கரும்பு போல்பவனே; பிறைத் திங்கள் தங்கிய சடையை முடியிற் கொண்டு விளங்கும் பெரிய அருட் குன்று போல்பவனே, மனைவாழ்க்கையாகிய சிறையிலிருந்து எனை விடுவித்து ஆட்கொண் டருளிய சிவனே உன்னைப் போற்றுகின்றேன். எ.று.

     வேதங்களும் அவற்றின் அந்த மெனப்படும் உபநிடத நூல்களும் கூறும் முடிபொருளாக விளங்கும் சிவஞானப் பொருளாதல் பற்றி, சிவனை “மறைமுடி விளக்கே” என்று சொல்லிப் போற்றுகின்றார். சிவஞான விளக்கமாகும் நிலை அகளநிலை என அறிக. அது ஞானத்தாலன்றி அறிவரிதாகலின், யாவரும் எளிதிற் கண்டு வழிபட விளங்கும் சகளவுருவை ஏனை மூன்றடிகளிலும் வைத்துப் போற்றுகின்றார். கறை-கடலிடத் தெழுந்த விட முண்டதனால் உளதாகிய நீல நிறம். சிவனுடைய பொன் மேனிக்கு அது கறையாயினும் நீலமணி போல் நிறமும் ஒளியும் கொண்டு ஒளிர்வதால், “கறைமணிகண்ட போற்றி” என வுரைக்கின்றார். நெற்றியிற் கண்ணும், சிந்திக்குந் தோறும் சிந்தையில் தேனூறும் தம்மையும் பற்றி, “கண்ணுதற் செங்கரும்பே போற்றி” எனப் புகல்கின்றார். மெல்லுந் தோறும் சாறூறுதல் போலச் சிந்திக்குந் தோறும் சிவானந்தத் தேனூறுதலால் செங்கரும்பு உவமமாயிற்று. பிறைச் சடைமுடி கொண்டோங்கும் என மாறுக. பிறை சடையிலும், சடைமுடியிலும் உள்ளது என உணர்க. சலியாத் தன்மை தோன்ற, “அருட் குன்றே” எனக் கூறுகிறார். உலகியற் பொருளின்பவுணர்வுகளால் அறிவைப் பிணித்து ஓடி யுய்தி பெறாவாறு மனைவாழ்வில்சிறைத்தலால், அதனைச் சிறை எனக் குறிக்கின்றால். “ஓடி யுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே” (புறம். 193) எனச் சான்றோர் உரைப்பது காண்க. வடலூர் வள்ளற் பெருமான் மனைவாழ்விற் பிணிக்கப்பட்டும் அதனுள் அகப்படாது நீங்கினதற்குக் காரணம் சிவபெருமான் தம்மை யாட்கொண்ட தென இதனால் தெரிவிக்கின்றாராதலின், “சிறை தவிர்த் தெனை யாட்கொண்ட சிவசிவ போற்றி போற்றி” என வுரைத்தருள்கின்றார்.

      இதனாற் சிவனுடைய அகள சகள நிலைகளை நினைந்து போற்றுதல் செய்தவாறாம்.

     (6)