எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2735.

     செய்வகை அறியேன் மன்றுண்மா மணிநின்
          திருவுளக் குறிப்பையுந் தெரியேன்
     உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ
          உறுகண்மேல் உறுங்கொல்என் றுலைந்தேன்
     மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன்
          வினையனேன் என்செய விரைகேன்
     பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுகேன்
          புலையனேன் புனல்அறி யேனே.

உரை:

      அம்பலத்தின்கண் காட்சி தரும் மாணிக்க மணி போல்பவனே, உலகியற் சூழலினின்றும் உய்ந்து போக்கறியும் உணர்விலேனாதலால், செய்யத் தக்கது அறியாமல், நின் திருவுள்ளக் கருத்தையும் தெரிந்து கொள்ளாமல், மேலும் துன்பங்கள் வருமென மனம் வருந்துகின்றமை ஒருபால் இருக்க, வினை பல வுடையனாகலின், உண்மை நெறியைக் கண்டடைய மாட்டேனாய்,. வேறே எவர்க்கும் சொல்லுவதின்றி பொய்நெறி மேற்கொண்டு அதற்குரியனவே செய்ய விரைந்து செல்கின்றேன்; இவ்வாற்றால் புலைத்தன்மை பெற்ற யான், புகலிடம் அறியாது புழுங்குகின்றேன்; அறிந்தோர் அறிவிப்பினும் அதன்கண் எவ்வாறு புகுவேன். எ.று.

     குறையுற்றவர் அம்பலத்தில் எழுந்தருளும் பெருமானிடம் முறையிடுவது இயல்பாதலால், சபாநாயகனான சிவனை, “மன்றுள் மாமணி” என்று பரவுகின்றார். உலகியல் வாழ்வில் துன்பங்கள் மேன் மேலும் வந்து தாக்குதலால் உணர்வின்கண் தெளிவிழந்து உய்வகையறியாமல் துயர்கின்றமை விளங்க, உணர்விலேன் அந்தோ உய்வகையறியேன்” எனப் பொதுப்பட மொழிகின்றார். தாக்கும் துன்பங்கட்கு இரையாகாமல் தகுவன செய்யமாட்டாமை பற்றிச் “செய்வகை யறியேன்” எனவும், செய்விக்கும் திருவருளை நினையாமை புலப்பட, “திருவுளக் குறிப்பையும் தெரியேன்” எனவும், அறியாமையும் தெரியாமையும் துன்பமே எண்ணி யஞ்சி வருந்தச் செய்கின்றன என்பாராய், “உறுகண் மேல் உறுங்கொல் என்று உலைந்தேன்” எனவும் எடுத்தோதுகின்றார். இத்துன்பங்கட் கெல்லாம் காரணம் கண்ட வள்ளற் பெருமான், மெய்ந்நெறி தேர்ந்துணர்ந்தடையாமல் பொய்ந்நெறி மேற்கொண்டு வினை பல செய்துடையனாயினேன் என்பாராய், “மெய்வகை யடையேன் பொய்வகை யுடையேன் வினையனேன்” என விளம்புகின்றார். பொய்ந்நெறிப் பொய்ச் செயல்களைப் பிறர்க்கு உரைத்தலாகாமையின், “வேறெவர்க் குரைப்பேன்” என்றும், பொய்ம்மைக் குரிய செயல்களையே செய் தொழுகினமையின், “என்செய விரைகேன்” என்றும் இசைக்கின்றார். பொய்வகை புலைத்தன்மையையுண்டு பண்ணுவதுகொண்டு, “புலையனேன்” எனத்தம்மைப் பழிக்கின்றார். பொய்ந் நெறி புலைத்தன்மை விளைவித்தமைகண்டு நீங்கி மெய்வகையாளர் அடையும் புகலிடம் அறியாது கலங்குவது புலப்பட, “புகல் அறியேன்” என்றும், அறிந்தோர் அறிவிப்பினும் புகுந் திறம் அறிகிலேன் என்றற்கு “எங்ஙனம் புகுவேன்” என்றும் இசைக்கின்றார்.

     இதனால், உய்வகை யறிவும் திருவுளக் குறிப்பும் தெரியாமல் மெய்வகை கைவிட்டுப் பொய்வகை மேற்கொண்டு வருந்தும் திறம் முறையிட்டவாறாம்.

     (7)