அறுச
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
2736. நிதியைநினைந் துனைமறந்த மதியைநினைந்
தழுகேனோ நிமலா னந்தக்
கதியைஇகழ்ந் திருள்விழைந்த விதியைநினைந்
தழுகேனோ கண்போல் வாய்ந்த
பதியைஉனைப் பாடாத பாட்டைநினைந்
தழுகேனோ படிற்று நெஞ்சச்
சதியைநினைந் தழுகேனோ யாதுகுறித்
தழுகேன்இத் தமிய னேனே.
உரை: தனித் துறைபவனாகிய யான், செல்வத்தின் மேல் வைத்த ஆசையால் உனது திருவருளை மறந்தொழிந்த அறிவுக்காக அழுவேனா? தூய இன்பப் பேற்றைக் கைவிட்டு இருள் செய்யும் தீநெறியை விரும்புதற் கேதுவாகிய விதியின் பொருட்டு அழுவேனா? கண்ணுக்குக் கண்ணாய் அமர்ந்த தலைவனாகிய உன்னைப் பாடாமல் உலகவரைப் பாடிய பாட்டுக்களின் பொருட்டு அழுவேனா? இவற்றிற் கெல்லாம் துணையாய் இருந்தவஞ்சம் பொருந்திய நெஞ்சை நினைத்து அழுவேனா? எது குறித்து அழுதொழிவேன். எ.று.
நிலைத்த உனது திருவருட் செல்வத்தை எண்ணாமல் நிலையாத பொருட் செல்வத்தை எண்ணியது குற்றமாதலின், அது குறித்து அழுதால் மனநோய் தீரும் என்பாராய், “நிதியை நினைந்து உனை மறந்த மதியை நினைந்தழுகேனோ” என்று கூறுகின்றார். நிலையினவும் நிலையாதனவும் அறிந்துரைக்கும் அறிவு அது செய்யாமையால் “மதியை நினைந்தழுகேனோ” என எடுத்தோதுகின்றார். நிமலானந்தம் - தூயவீடு பேற்றின்பம். கதி - சிவகதி. சிவகதிக் குரிய ஞானத்தில் உய்க்காது பிறப் பிறப்புக்களை விளைவிக்கும் அஞ்ஞான இருள் நெறிக்கண் செலுத்தினமை யுணர்ந்து “விதியை நினைந்தழுகேனோ” என விளம்புகின்றார். பாடுவார் பாடுமிடத்துப் பாட்டின் பொருள் மனத்தினும் வாயினும் எழுதும் கையினும் ஒன்றி நெடிது நிற்றலின், சிவனைப் பாடிச் சிந்தையொன்றி இன்புறுதலை விடுத்து உலகவரைப் பாடி யவலமெய்துவது பற்றி, “பதியை நினைப் பாடாத பாட்டை நினைந்தழுகேனோ” எனப் பரிபவப்படுகின்றார். படிறு - வஞ்சம். சதி - தீச்செயல்.
இதனால் சிவனையும் அவன் திருவருளையும் நினையாது ஒழிந்தமைக்கு வருந்துவது தெரிவித்தவாறாம். (8)
|