2737.

     தாய்தடை என்றேன் பின்னர்த்
          தாரமே தடைஎன் றேன்நான்
     சேய்தடை என்றேன் இந்தச்
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும்
     தோய்தடைச் சிறியேன் இன்னுந்
          துறந்திலேன் எனைத் தடுக்க
     ஏய்தடை யாதோ எந்தாய்
          என்செய்கேன் என்செய் கேனே.

உரை:

      எந்தையே, எதைச் செய்ய நினைக்கினும் தடையாவனவற்றை யெண்ணிச் சிறுமை யுறுபவனாகிய யான், துறவு மேற் கொள்ளும் முன் பெற்ற தாய் தடை செய்வள் என்றும், பின்பு மனைவி தடுப்பளென்றும், பின்பு பிள்ளைகள் தடையாகுமென்றும் நினைந்தொழிந்தேன்; இச் சிறுதடைகளெல்லாம் இல்லா தொழிந்த பின்னும் துறவு மேற்கொள்ளேனாயினேன்; இதற்கு ஏற்றதடையாயாவது யாதோ அறிகிலேன்; என்ன செய்வேன். எ.று.

     எதனைச் செய்ய நினைக்கினும் அதற்குத் தடையான கருத்துக்களை நினைந்து தயங்குவது சிலர்க்கு இயல்பாதலின், அவ்வியல்புடையனாய்ப் பயனுடைய செய்யாது தாழ்த்துச் சிறுமை யற்றவனெனத் தம்மியல்பு கூறுகின்றாராகலின், “தோய் தடைச் சிறியேன்” என்று உரைக்கின்றார். குடும்பத் தொல்லைகளைக் கண்டு துறப்பது நன்றென எண்ணியபோது, பேணற் கமைந்த தாயன்பு தடை செய்வது கண்டு கைவிட்டேன் என்பாராய், முதற்கண் “தாய் தடை என்றேன்” என்றும், திருமணம் செய்து கொண்ட போது தமது துறவு வேட்கைக்கு மனைவி யுறவும் பின்பு மக்களுறவும் துறக்கும் உள்ளத்தை மாற்றுமே யென அஞ்சினேன் என்பாராய், “பின்னர் நான் தாரமே தடையென்றேன் சேய் தடை என்றேன்” என்றும் கூறுகின்றார். மனத்திட்பம் உடையார்க்கு இத்தடைகள் ஒரு பொருளாக எதிர் நில்லாமை யிணர்ந்தமை புலப்பட, “இந்தச் சிறுதடை எல்லாம் தீர்ந்தும்” எனவும், உலகிய லின்பத் தொடர்பு தடுத்தமையின், துறவை மேற் கொண்டிலேன் என்பார், “இன்னும் துறந்திலேன்” “எனவும் இசைக்கின்றார். உலகியல் தொடர்பு ஏனையோர் தொடர்புகளை நோக்க மிகவும் வலி யில்ல தெனக் கண்டும் துறவாமைக்குக் காரணமொன்று உளதாக வேண்டும், அது திருவருள் துணையாகாமையோ யாதோ தெரியவில்லை என்று கூறலுற்று, “எனைத் தடுக்க, ஏய்தடை யாதோ” என்றும், “என்செய்கேன் என் செய்கேன்” என்றும் நினைந்து வருந்துகின்றார்.

     இதனால், துறவு மேற் கொள்ளாமைக்குக் காரணம் ஆராய்ந்தமை தெரிவித்தவாறாம்.

     (9)