எண
எண்சீர்க் கழிநெடிலடி
யாசிரிய விருத்தம்
2738. எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி
இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன்
விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை
விரும்புகிலேன் நின் அருளை விழைந்தி லேன்நான்
பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற்
பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன்
கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர்
கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே.
உரை: எண்ணில்லாத உயிர்கள் எல்லாவற்றிலும் உள்ளொளியாய்ப் பொருந்த எழுந்தருளும் பெருவாழ்வையுடைய பெருமானே, இறைவனே, விண்ணுலகுகள் அத்தனைக்கும் மேலாக வுள்ள நின்னுடைய பெரிய சிவ பதத்தையோ, சுத்த நிலையையோ, திருவருள் நலத்தையோ விரும்பாமல் பெண்களிடத்தே பெறும் காமமயக்கமென்னும் ஒரு முருட்டுத் தன்மை கொண்ட பேயால் பற்றப்பட்டு அலைப்புண்டு அடிபட்ட பிஞ்சு போன்று உள்ளேன்; கடையனாகிய யான் கண்ணிழந்த குருட்டுத் தன்மையும் வாயில்லாத ஊமைத் தன்மையும் உடைய சிலர் யானை கண்டுரைத்த கதை போல் நினது அருட் புகழைக் கண்டு உரைப்பேன் என மொழிவேனா, என்னென்பேன், எ.று.
ஒன்றினொன்று வேற்றுமையுடைய உயிர்களின் தொகை இத் துணையென எண்ணுதற்காகாமை பற்றி, “எண் கடந்த உயிர்கள்” எனவும், உயிர் தோறும் உள்ளுணர்வாய் நின்று இறைவன் ஒளி செய்தலால், “ஒளியாய் மேவி இருந்தருளும் பெருவாழ்வே” எனவும், உயிர்களே யன்றி உயிரில் பொருள்களிலும் இருத்தல் விளங்க, “இறையே” எனவும இயம்பு
கின்றார். எவ்வியிரிலும் எப்பொருளிலும் எங்கும் கலந்து நிற்கும் இறைவனுக்குத் தனக்கென ஒரு தனியிடம் உண்டோ என்பார்க்கு, “உண்டு அது சிவபதம்” என்பார் போல, “நின்றன் விண் கடந்த பெரும் பதத்தை விரும்பேன்” என மொழிகின்றார். விண்ணின் மேல் ஏழுலகம் உண்டெனப் புராணம் கூறுதலால், அவற்றிற் கெல்லாம் மேலேயுள்ள சிவபதத்தை, “விண் கடந்த பெரும்பதம்” என்றும், அது கடவுளாகிய சிவனொருவற்கே யுரிய தென்றற்கு “நின்றன் பெரும்பதம்” என்றும் எடுத்துரைக்கின்றார். கேவலம் - சகலம், சுத்தம் என்ற உயிர்கட்குரிய நிலை மூன்றனுள், மலப் பிணிப்பினின்றும் நீங்கி உயிர்கள் ஞானவடிவுற்றுச் சிவானந்தப் பெரும் போக நுகரும் நிலையாகிய சுத்தத்தையும் விரும்பினேனில்லை யென்றற்குத் “தூய்மை விரும்புகிலேன்” எனவும், சிவனது திருவருளே உயிர்கள் அறிவு விழைவு செயல் வகைகளைத் தொழிற் படுத்திப் பயன் நுகர்விக்கும் அரும் பொருளாகவும் நான் அதனையும் விரும்பிற்றிலேன் என்பார், “நின்னருளை விழைந்திலேன்” எனவும் கூறுகின்றார். விரும்பாமைக்குக் காரணம் பெண் மயக்கத்தால் அலைப்புண்டு வருந்தி மெலிந்தமையே என்பாராய், “பெண்கள் தந்தமயல் எனும் ஓர் முருட்டுப் பேயாற்பிடியுண்டேன் அடியுண்ட பிஞ்சு போன்றேன்” எனப் புலம்புகிறார். பெண்ணுருவில் தோன்றி ஆடவர் மனத்தைத் தாக்கிக்காம மயக்கத்தை விளைவித்தலால், “பெண்கள் தந்த மயல் எனும் ஓர் முருட்டுப் பேய்” என வுரைக்கின்றார். திருந்த மாட்டாத பேய் என்றற்கு “முருட்டுப் பேய்” என்று சொல்லுகிறார். திருத்த வியலாத மரக்கட்டையை “முருட்டுக் கட்டை” என்பர். கல்லாலும் கொம்பாலும் அடிபட்ட பிஞ்சு காய்த்துக் கனியாதலின்றிக் கெட்டொழிதல்பற்றி, அஃது உவம மாயிற்று; ஆகவே, தெளிவுற்று ஞானப்பேறு எய்தேன் என்பது கருத்து. காணாமையே யன்றி வாயாற் சொல்லவும் மாட்டாமையால், “கண் கடந்த குருட்டு ஊமர் கதை” என எடுத்துக் காட்டுகின்றார். இக் குறைபாடுகளால், மக்களினத்திற் கீழ் மகனாயினேன் என்பாராய், “கடையனேன்” என்று கூறுகிறார்.
இதனால், உயிர்க்கு உறுதி நோக்காது பெண் மயலால் அறிவொழுக்கமிழந்தமை சொல்லி முறையிட்டவாறாம். (10)
|