2739.

     மின்னைப் போல்இடை மெல்இய லார் என்றே
          விடத்தைப் போல்வரும் வெம்மனப் பேய்களைப்
     பொன்னைப் போல்மிகப் போற்றி இடைநடுப்
          புழையி லேவிரல் போதப்பு குத்திஈத்
     தன்னைப் போல்முடை நாற்றச்ச லத்தையே
          சந்த னச்சலந் தான்எனக் கொள்கின்றேன்
     என்னைப் போல்வது நாய்க்குலம் தன்னிலும்
          இல்லை அல்ல தெவற்றினும் இல்லையே.

உரை:

      மின்னுக் கொடி போன்ற இடையும் மென்மை சான்ற இயல்பு முடையவர் என்று சான்றோர் புகழ விளங்கி விடம் போலும் பண்புற்று வரும் வெவ்விய மனத்தையுடைய பேய் போன்ற பெண்களைப் பெறற்கரும் பொன் போலப் பேணி அவர்களின் இடை நடுவிலுள்ளதுவாரமாகிய உந்தியிலே கைவிரலை நுழைத்து அங்கே கசியும் முடைநாறும் நீரை ஈயைப் போல நுகர்ந்து, சந்தன நீர் போலக் கருதுகின்றேன்; இச்செயலால், என்னைப்போலும் ஒரு விலங்கு நாயினத்திலும் இல்லை; வேறு எவற்றிலுமே இல்லை, காண். எ.று.

      மின்னற் கொடி போலும் இடையும் மென்மையான இயல்பு முடையராதலின், மகளிர் பொன் போற் பேணற் குரியர் என்பது சான்றோர் கருத்து. “பேணுதகு சிறப்பின் பெண்ணியல்பாயினும் என்னொடு புரையுந ளல்லள்” (பதிற். நச்சி. மேற்) என வருவது காண்க. தம்மைக் கொள்பவன்பால் அன்பு வையாது அவனது பொருள் மேல் மனம் வைக்கும் பெண்டிரை, “விடத்தைப் போல் வரும் வெம்மனப் பேய்கள்” என வெறுத் துரைக்கின்றார். இடைநடுப் புழை, இடையின் நடுவிடமாகிய உந்தி, உந்தியில் கைவிரலை நுழைத்துக் காம வேட்கையை மிகுவித்தல் கலவி வகைகளில் ஒன்று. உந்தியின்கண் அழுக்கும் நீரும் கசித லுண்மையின் அதனை “முடை நாற்றச் சலம்” என்கின்றார். சலம்-நீர்.

      இதனால், மகளிர் கலவி வகையின் புன்மை கண்டு அருவருத்தொதுக்கும் திறம் தெரிவித்தவாறாம்.

     (11)