அறுச
அறுசீர்க்க கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2740. கள் உருகும் மலர்மணம்போல் கலந்தெங்கும்
நிறைந்தோய்நின் கருணைக் கந்தோ
முள்உருகும் வலியபராய் முருடுருகும்
உருகாத முறைசேர் கல்லும்
வள்உருகும் மலைஉருகும் மண்உருகும்
மரம்உருகும் மதியி லேன்றன்
உள்உருகும் வகையிலைஎன் செய்கேன்நான்
ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
உரை: தேனூறுகின்ற மலரின்கண் மணம் போற் கலந்து எங்கும் நிறைந்திருக்கும் சிவபரம் பொருளே, நினது அருளைப் பெறற்குச் சிறுமுள்ளும் வன்மையையுடைய பராய் மரத்தின் முருட்டுக் கட்டையும் உருகும்; உருகும் தன்மை யில்லாத வளவிய கருங் கல்லும், கற்கள் நிறைந்த மலையும், மண்ணும், மண் மேல் நிற்கும் மரமும் உருகா நிற்குமாக, அறிவில்லாத எனது உள்ளம் உருகும் வகை சிறிதும் இல்லையே; இதற்கு யான் என்ன செய்வேன்; ஒதி மரம் போன்ற நான் ஏன் பிறந்தேனோ, அறியேன். எ.று.
இறைவன் உலகுயிர்களில் கலந்து நிறைந்திருக்கும் திறத்தை மலர் மணம் போன்ற தெனச் சான்றோர் கூறுதலால், “மலர் மணம் போல் கலந்தெங்கும் நிறைந்தோய்” எனக் கூறுகின்றார். “நறுமலர் எழுதரு நாற்றம் போற் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள்” (அதிசயப்) என மணிவாசகர் உரைப்பது காண்க. தேன் சுரந்து நிறையும் மலரைக் “கள்ளுருகும் மலர்” எனச் சிறப்பிக்கின்றார். பராய் - வன்மை மிக்க மர வகையுள் ஒன்று. “பைந்தன் மாதவி சூழ்ந்த பராய்த் துறை” (பராய்) என ஞானசம்பந்தர் பாடுவர். முருடு - முருட்டுக் கட்டை. கல்லுக்கு உருகும் தன்மையில்லையென்பது கொண்டு, “உருகாத முறைசேர் கல்” லென வுரைக்கின்றார். கல் வள்ளுருகலாவது, வலிமையால் வளமுற்ற கருங்கல் வன்மை குன்றி நீராய் உருகுதல். உருகும் தன்மை யில்லாதன ஒருகால் உருகும் இயல்பினவாகவும் என் உள்ளம் உருகுகிறதில்லை என வருந்துகிறார். “உருகி நினைவார் பெருகி வாழ்வார்” (முதுகுன்) எனப் பெரியோர் கூறுவதால், உருகா மனத்தோடு வாழ்தல் பயன்படாமை பற்றி, “உருகும் வகையிலை என்செய்வேன்” என்றும், திருவருள் பெறாத பிறப்பு வீண் பிறப்பாதலை நினைந்து “ஏன் பிறந்தேன்” என்றும் சொல்லி வருந்துகிறார். ஒதி மரம் - உள்வலியில்லாத ஒரு வகை மரம்.
இதனாற் சிவனருள் வேண்டி உருகாத பிறப்பும் வாழ்வும் பயனில்லாதன என விளக்கியவாறாம். (12)
|