2741.

     மன்உயிர்க்குத் தாய்தந்தை குருதெய்வம்
          உறவுமுதல் மற்றும் நீயே
     பின்உயிர்க்கோர் துணைவேறு பிறிதிலைஎன்
          றியான்அறிந்த பின்பொய் யான
     மின்உடற்குத் தாய்தந்தை ஆதியரை
          மதித்தேனோ விரும்பி னேனோ
     என்உயிர்க்குத் துணைவாநின் ஆணைஒன்றும்
          அறியேன் நான் இரங்கி டாயே.

உரை:

      எனது உயிர்க்குத் துணைவனே, நிலை பெற்ற உயிர்த்தொகைகட்குத் தாயும் தந்தையும் குருவும் தெய்வமும் பிற வுறவுகளும் எல்லாம் நீயே என்று அறிந்த பின்பு உயிர்கட்குத் துணையாவது வேறே பிறிதில்லை எனத் தெளிந்தேனாதலால், பொய்யாய் மறைந்து மின்னற் போற் கெடும் உடம்புக்குத் தாயும் தந்தையும் பிறவுமாகியோரை நான் பொருளாக மதித்ததில்லை; நினது ஆணை யாதோ அறியேன்; என்பொருட்டு இரங்கி அருள் ஞானம் நல்குக. எ.று.

     உயிரோடு உடனிருந்து உணர்வொளி செய்தலால் சிவனை “என்னுயிர்க்குத் துணைவா” என்று இயம்புகின்றார். உயிராவது அனாதி நித்த சித்துப் பொருள் என அறிவு நூல்கள் உரைத்தலால், “மன்னுயிர்” என்றும், உயிர்க்குரிய தந்தையும் தாயும் குருவும் தெய்வமும் பிறவும் சிவமேயாதலால், “மன்னுயிர்க்குத் தாய் தந்தை குருதெய்வம் உறவு முதல் மற்று நீயே” என்றும் இசைக்கின்றார். சிவனுக்குப் பின் உயிர்கட்குத் துணையாவது தெய்வ நிலையிலோ மக்கள் நிலையிலோ ஒன்றும் இல்லை யென வற்புறுத்தற்குப் “பின்னுயிர்க்கு ஓர் துணை வேறு பிறிதிலை” என்றும், இவ்வுண்மையைத் தெளிவாக அறிந்து கொண்டேன் என்பார், “என்று யான் அறிந்த பின்” என்றும் கூறுகின்றார். உடம்பு, நிலையா இயல்பின தென்றற்குப் “பொய்யான மின்னுடல்” என வுரைக்கின்றார். “பொய்யினால் மிடைந்த போர்வை” (அதிகை. வீரட்) என நாவுக்கரசரும், “பொய்த் தன்மைத்தாய மாயப் போர்வை” (ஆரூர்) என நம்பியாரூரரும் உரைப்பன காண்க. பிறந்த வுடம்புக்குத் தாய் தந்தை குரு முதலியோர் வேறு வேறு உளராயினும் அவரும் பொய்யுடல் தாங்கும் பொய்யராதலால் அவர்களைப் பொருளாக யான் கருதுவதில்லை யென்றற்கு “உடற்கும் தாய்தந்தை யாதியரை மதித்தேனோ” எனவும், “விரும்பினேனோ” எனவும் உரைக்கின்றார். அவர்களது பொய்ம்மை நிலையை யறிந்த பின் நினது ஆணையாகச் சொல்லுகிறேன்; அவர்களை உயிர்த் தந்தை தாயராக அறிந்தேனில்லை என்பாராய், “நின் ஆணையொன்றும் அறியேன்” எனச் சொல்லுகின்றார். இந்த நிலையில் எனக்கு அருளுவது நினக்குக் கடன் என்றற்கு “இரங்கிடாயே” என இசைக்கின்றார்.

      இதனால் உயிர்க்குத் தாயும் தந்தையும் உறவும் சிவமே; உடற்குத் தாயும் தந்தையும் உறவுமாயினா ரல்லர் என விளம்பியவாறாம்.

     (13)