2742. மாற்றரிய பசும்பொன்னே மணியேஎன்
கண்ணேகண் மணியே யார்க்குந்
தோற்றரிய சுயஞ்சுடரே ஆனந்தச்
செழுந்தேனே சோதி யேநீ
போற்றரிய சிறியேனைப் புறம்விடினும்
வேற்றவர்பாற் போகேன் வேதம்
தேற்றரிய திருவடிக்கண் பழிவிளைப்பேன்
நின்ஆணைச் சிறிய னேனே.
உரை: மாற்று இல்லாத பசும்பொன் போன்றவனே, மாணிக்க மணியே, என்னுடைய கண்ணாயும் கண்ணினுள் மணியாயும் உள்ளவனே, எத்தகைய ஞானவான்களுக்கும் காண முடியாத சுயஞ்சுடராகியவனே, இன்பம் தரும் செழுமையான தேனே, அருட் சோதியே, பேணப்படுதற் கில்லாத அற்பனாகிய என்னைக் கைவிட்டாலும் நின்னின் வேறாகிய தேவர்களில் எவரிடமும் துணை வேண்டிச் செல்லாமல், வேதங்களால் தெளிய முடியாத உனது திருவடியில் வீழ்ந்து மடிந்து உனக்குப் பழி யுண்டாக்குவேன்; நின் மேல் ஆணையாகச் சொல்லுகிறேன்; சிறியவனாதலால் என்னை யாரும் பழிக்க மாட்டார்கள். எ.று.
பொன்னின் ஓட்டம் காண்பவர் இத்தனை மாற்றுடையது இப்பொன் என்பர்; அது போற் காணக் கூடாத உயர்வுடையது நினது திருமேனிப் பொன்னிறம் என்றற்கு, “மாற்றரிய பசும் பொன்னே” எனவும், ஏனைச் செம்பு முதலியவற்றின் கலப்பில்லாத பொன்னைப் “பசும் பொன்” எனவும் கூறுவர். மணி - ஈண்டு மாணிக்க மணி மேற்று. ஒளியுற்று உணர்வு பெறுவித்தலால் “கண்ணே” எனவும், “கண்மணி” எனவும் புகழ்கின்றார். சிவத்தின்கண் விளங்கும் ஞானவொளிச் சுடர் ஞானிகளாகிய தவச் செல்வர்க்கும் காண்பரிதாதல் பற்றி, “யார்க்கும் தோற்றரிய சுயஞ்சுடரே” என்றும், ஞான நாட்டம் கொண்டு காண்பார்க்குப் பேரின்பம் உண்டாதலால் “ஆனந்தச் செழுந்தேனே” என்றும், பொதுவாய் நினைவார்க்கு அருட் சோதியாய்த் திகழ்வது பற்றிச் “சோதியே” என்றும் இயம்புகிறார். நல்லறிவும் நற்செயலும் உடையவரே பேணிக் காக்கப் படுவராதலால், தனக்கு அச்சிறப்பில்லாமை விளங்க, “நீ போற்றரிய சிறியேன்” எனக் கூறுகின்றார். இவ்வாறு சிறியனாகிய எனது சிறுமை நோக்கிப் புறக்கணித்து விலக்குவாயின், அறிவாற்றல் துணை வேண்டி வேறு தெய்வங்களை நாடிப் போகமாட்டேன் எனத் தனது உட்கோளை யுரைப்பாராய், “புறம் விடினும் வேற்றவர்பாற் போகேன்” என்றும், செய்யப் போவது இது வென்றற்கு “வேதம் தேற்றரிய திருவடிக்கண் பழி விளைப்பேன்” என்றும், இதனால் சிறுமைப் பண்பும் சிறு தொழிலுமுடைய சிறியவனாதலால் என்னையெவரும் இகழ்வாரில்லை என்பாராய்ச் 'சிறியனேனே” என்றும் இயம்புகின்றார். வேத ஞானம் இறைவனைக் காண மாட்டாமை பற்றி, “வேதம் தேற்றரிய திருவடி” எனச் சிறப்பிக்கின்றார். பழி விளைத்தல் - தற்கொலை முதலியன செய்து கொளல்.
இதனால், அருளாது கைவிடின் பழி விளைப்பே னென உட்கோள் தெரிவித்தவாறாம். (14)
|