2743.

     உள்உணர்வோர் உளத்துநிறைந் தூற்றெழுந்த
          தெள்ளமுதே உடையாய் வஞ்ச
     நள்உணர்வேன் சிறிதேனும் நலமறியேன்
          வெறித்துழலும் நாயிற் பொல்லேன்
     வெள்உணர்வேன் எனினும்என்னை விடுதியோ
          விடுதியேல் வேறென் செய்கேன்
     தள்உணர்வோன் எனினும்மகன் தனைஈன்றோர்
          புறம்பாகத் தள்ளார் அன்றே.

உரை:

     உள்ளத்தே வைத்து மெய்ம்மை யுணரும் சிவஞானிகளின் திருவுள்ளத்தில் சிறந்து சுரக்கின்ற தெள்ளமுதமே, என்னையுடையவனே, வஞ்ச நினைவுகளையே மனத்திற் கொண்டவனாய் நலமொன்றும் தெரியாமல் வெறி கொண்டலையும் நாயினும் பொல்லாதவனாய், பயனில்லாதவற்றை நினைந்து திரிவேனாயினும், என்னைக் கைவிடலாகாது; விடுவாயேல், மேற் சொன்னவற்றின் வேறாக யான் யாது செய்ய இயலும்; அறிஞர்களால் வெறுத்துத் தள்ளப்படும் தீய கருத்துக்களையுடையவனாயினும், மகன் என்ற தொடர்பால் அவனைப் பெற்றோர்கள் புறக்கணித்து விலக்க மாட்டார்களன்றோ. எ.று.

     மனத்தைப் பொறி வழிச்செல்ல விடாமல் அக நோக்கிற் செலுத்தி மெய்ப் பொருளாகிய சிவத்தின் மெய்ம்மை காணும் தவ ஞானிகளை “உள்ளுணர்வோர்” என்றும், உள்ளு தோறும் அவர் உள்ளத்தில் ஞானவின்பம் ஊற நிற்பதால், சிவனை, “உளத்து நிறைந்து ஊற்றெழுந்த தெள்ளமுதே” என்று சிறப்பிக்கின்றார். “உளத்து ஊற்றெழுந்து நிறைந்த தெள்ளமுதே” என இயைத்துக் கொள்க. “சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று, பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்” (சிவபு) என்பது திருவாசகம். தூய ஞானவுள்ளத்தில் ஊறி நிறைதலால் சிவபோகத்தைத் “தெள்ளமுது” எனத் தெரிவிக்கின்றார். உயர்ந்தோர் உள்ளத் துயர்வைக் கண்ட வள்ளற் பெருமான் தமது உள்ளத்தை நோக்குகிறார்; அதன்கண் வஞ்ச நினைவுகளும் நலம் பயவாத கொள்கைகளும் வெறிது திரியும் செயற் பண்புகளும் பிறவும் காணப்படுவதால், “வஞ்ச நள்ளுணர்வேன் சிறிதேனும் நலமறியேன் வெறித் துழலும் நாயிற் பொல்லேன்” என்று உரைக்கின்றார். நள் - நடுவிடம். வெறி பிடித்த நாயை “வெறித் துழலும் நாய்” என வெறுத்து மொழிகின்றார். வெள்ளுணர்வு - வெள்ளை யுணர்வு; அஃதாவது வீண் நினைவு. உணர்வேன் - உணர்வுகளை யுடையவன். மகன் நல்லறி வில்லாதவனாதல் கண்டும் தாய் தந்தையர் அன்பாற் கைவிடுவதில்லை. இதனைக் கூறுவது வேற்றுப் பொருள் வைப்பு.

     இதனால், என்பால் நல்லுணர்வு இல்லாமை, பற்றிக் கைவிடலாகாது என முறையிட்டவாறாம்.

     (15)