2744. கலைபயின்று நெறிஒழுகும் கருத்துடையேன்
அலன்நின்னைக் கனவி லேனும்
மலைபயின்ற பெருங்குணத்தெம் வள்ளலே
எனத் துதியேன் வஞ்ச மில்லா
நிலைபயின்ற நல்லோர்தம் நேசமிலேன்
கைதவமே நினைப்பேன் அந்தோ
உலைபயின்ற அரக்கெனநெஞ் சுருகேன்நான்
ஏன்பிறந்தேன் ஒதிய னேனே.
உரை: ஒதி மரம் போன்ற யான், நல்ல பல கலைகளைப் பயின்று நன்னெறிக்கண் நின்றொழுகும் எண்ண முடையவனல்ல; மலை போன்ற பெருங் குணங்களே நிறைந்த எமது அருள் வள்ளலே என்று உன்னைப் பன்முறையும் போற்றித் துதித் தறியேன்; வஞ்சமேயில்லாத நெஞ்சை நிலையாக வுடைய நன்மக்களின் நட்பைப் பெற்றறியாதவன்; வஞ்சக் கருத்துக்களையே நினைப்பவன்; ஐயோ, உருக்குலையிற் பெய்த அரக்குப்போல உருகுதல் இல்லா நெஞ்சுடையனாகிய யான் ஏன் பிறந்தேனோ, தெரியேன். எ.று.
பருத் துயர வளர்வதாயினும் உள்வலி யில்லாதது ஒதி மரம்; அது போல் வீணே வளர்ந்துள்ளேன் என்பாராய், “ஒதியனேன்” எனத் தம்மைக் குறித்துரைக்கின்றார். கலைப் பயிற்சி பயிலும் மனத்தைச் செந்நெறிக்கண் செலுத்தும் சிறப்புடைய தாகலின், “கலை பயின்று நெறியொழுகும் கருத்துடையேனலன்” எனக் கூறுகின்றார். “வைத்த தொரு கல்வி மனப் பழக்கம்” என்பர் ஒளவையார். சலித்தலின்றி நிலைத்த பெருங் குணமுடைய பெருமக்களைக் குணப் பெருங் குன்றே எனப் போற்றும் மரபு பற்றி, சிவபெருமானை, “மலை பயின்ற பெருங்குணத்து எம் வள்ளலே” என்று புகழ்கின்றார். நினது இச் சிறப்பியல்பை நான் கனவிலும் சொல்லித் துதித்ததில்லை என்பார், “கனவிலேனும் துதியேன்” என்று கூறுகின்றார். நெஞ்சினை வஞ்ச நினைவுகட் கிடம் கொடாதபடி நன்னிலையில் வைத்தொழுகும் நன்மக்களை, “வஞ்சமில்லா நிலை பயின்ற நல்லோர்” எனவும், அவரது நட்பு தன்னொடு பயில்பவருள்ளத்தை நன்னெறியிற் பிறழாவாறு காக்கும் இயல்பினதாக, அதனைக் கொண்டிலேன் என்றற்கு, “நல்லோர்தம் நேசமிலேன்” எனவும் சொல்லுகின்றார். கைதவம் - வஞ்ச நினைவுகள். உருகும் பண்பில்லாத நெஞ்சின்கண் இக் கைதவ நினைவுகள் இருக்குமென்பவாகலின், “உலை பயின்ற அரக்கென நெஞ்சுருகேன்” என்று உரைக்கின்றார். உலை, இரும்பு முதலிய வன்பொருள்களை யுருக்கும் உருக்குலை. உருக்குலையிற் பட்ட அரக்கு நீராய் உருகியோடுவது இங்கே உவமமாயிற்று. உருக்கமில்லாத நெஞ்சினனாய்ப் பிறந்ததனால் தனக்கோ உலகுக்கோ பயனின்மையின், “ஏன் பிறந்தேன்” என வருந்துகின்றார்.
இதனால், நெஞ்சுருகாமையும் அதனால் பிறவி பயன்படாமையும் எடுத்தோதியவாறாம். (16)
|