2745. இரும்புன்னை மலர்ச்சடையாய் இவ்வுலகில்
சிலர்தங்கட் கென்று வாய்த்த
அரும்பின்னை மார்பகத்தோன் அயனாதி
சிறுதெய்வ மரபென் றோதும்
கரும்பொன்னைச் செம்பொன்னில் கைவிடா
திருக்கின்றார் கடைய னேற்கே
தரும்பொன்னை மாற்றழிக்கும் அரும்பொன்நீ
கிடைத்தும் உனைத் தழுவிலேனே.
உரை: பெரிய புன்னை மலர்களை யணிந்த சடையையுடைய பெருமானே, இவ்வுலக மக்களிற் சிலர் தங்கட் கென்று அமைந்த, அரிய பின்னைப் பிராட்டியை மார்பின்கட் கொண்ட திருமாலும் பிரமன் முதலிய தெய்வங்களாகிய இரும்பைச் செம்பொன்னாகக் கொண்டு இறுகப் பற்றியொழுகுகின்றார்கள்; கடையவனாகிய எனக்கு யாரும் வழங்குகின்ற பொன்னை மாற்றின்மையால் வெல்லும் பெறற்கரும் பொன்னாக நீ கிடைத்திருக்கவும் யான் உளங் கொள்ளா திருக்கின்றேன்; என் கீழ்மை இருந்தவாறு என்னே; எ.று.
புன்னை - ஒருவகை மரம்; இது கடற்கரைக் கானற் பகுதியில் வளர்வது; “பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்டாது போர்க்கும் கானல்” (சிலப். கானல்) என இளங்கோவடிகள் கூறுவது காண்க. இதன் பூவைக் “கடிமலர்”, “திகழ்மலர்” (கலி. 135) என்று சங்கச் சான்றோர் பாராட்டுகின்றனர். “புன்னை ஞாழற் புறணியருகெலாம், மன்னினார் வலங்கொள் மறைக்காடர்” (மறைக்) என்று நாவுக்கரசர் பாடுவர். பின்னை - திருமகள். “பின்னை மணாளனைப் பேரிற் கிடந்தானை” (முதலாயி. 5:1) எனப் பெரியாழ்வார் குறிப்பது காண்க. “தங்கட்கென்று வாய்த்த கரும்பென்னை” என இயையும். திருமால் முதலியதெய்வங்களைச் சிறு தெய்வங்கள் எனச் செப்புகின்றார்; சிறுமை, பிறப் பிறப்புக்களை யுடையராம் தன்மை. “நூறு கோடி பிரமர்கள் நொந்தினார், ஆறுகோடி நாராயண ரங்ஙனே, ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர், ஈறிலாதவனீச னொருவனே” (ஆதிபுராணத்) என நாவுக்கரசர் நவில்வது காண்க. கரும்பொன் - இரும்பு. சிறு தெய்வங்களை முழு முதற் பெருந் தெய்வமாக எண்ணிவிடாப் பிடியாய் வழிபடுதலைக் கண்டு இரங்குகின்றாராகலின், “செம்பொன்னிற் கைவிடா திருக்கின்றார்” என வுரைக்கின்றார். மூவகைத் தெய்வத் தொருவன் முதல் உரு, வாயது வேறாம்” (திருமந்.) எனத் திருமூலரும் தெரிந்துரைக்கின்றார். சிவத்தொண்டரைத் தலையாயவர் எனப் பெரியோர் மொழிதலால், தம்மைக் கடையவன் என்கின்றார். “அனுசயப்பட்டு அதுவிது என்னாதே, கனிமனத்தொடு கண்களும் நீர் மல்கிப், புனிதனைப் பூவானூரனைப் போற்றுவார் மனிதரிற் றலையாய மனிதரே” (பூவனூர்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. தூய பொன்னாதல் பற்றிச் சிவனை, “பொன்னை மாற்றழிக்கும் அரும் பொன் நீ” என மொழிக்கின்றார். தரும் பொன் - உயர்வு தரும் பொன். தழுவுதல் - மேற் கொண்டு வழிபட் டொழுகுதல்.
இதனால், சிலர்க்குச் சிறு தெய்வங்கள் பொன்னாக, எனக்கு நீ பொன்னாவாய் எனப் புகன்றவாறாம். (17)
|