2746. கஞ்சமலர்த் தவிசிருந்த நான்முகனும்
நெமாலுடும் கருதிப் போற்ற
அஞ்சநடை அம்மைகண்டு களிக்கப்பொன்
அம்பலத்தில் ஆடு கின்ற
எஞ்சல்இலாப் பரம்பொருளே என்குருவே
ஏழையினே னிடத்து நீயும்
வஞ்சம்நினைத் தனையாயில் என்செய்வேன்
என்செய்வேன் மதியி லேனே.
உரை: தாமரைப் பூவை இருக்கையாகக் கொண்ட பிரமனும் நெடிய திருமாலும் நினைந்து வழிபட்டு நிற்க, அன்னத்தின் நடையையுடைய உமாதேவி கண்டு மகிழ, பொன்னம்பலத்தில் திருநடம் புரிகின்ற ஈறில்லாத பரம்பொருளே, என்னுடைய குருவே, ஏழையாகிய என்பால் வஞ்சம் புரிய நினைந்தருள்வாயாயின், அறிவில்லாத யான் ஏமாந்து வருந்துவதல்லது வேறே யாது செய்வேன். எ.று.
கஞ்சம் - தாமரை. நெடிதுயர்ந்து நின்று தன் திருவுருவைக் காட்டிய பெருமானாதலால், திருமாலை “நெடுமால்” எனக் கூறுகின்றார். பரம்பொருள் என நினைந்து துதித்தல் விளங்கக் “கருதிப் போற்றி” என்று உரைக்கின்றார். அம்சம் என்ற வடசொல் அஞ்சம் என்றும், அன்னம் என்றும் பொருள்பட வந்தது. அன்னத்தின் நடையை நன்மகளிர் நடைக் கொப்புக் கூறுவது மரபாதலால், “அஞ்ச நடை அம்மை” என அறிவிக்கின்றார். உமையம்மையாகிய அருட் சத்தி நோக்கினாலன்றி ஞானமூர்த்தியாகிய கூத்தப் பெருமான் திருநடம் நிகழா தென்னும் அறிவு நூற் கருத்துக்கேற்ப, “அஞ்சடை அம்மை கண்டு களிக்க” என இயம்புகின்றார். “குயிலாலும் மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக்கூத்தாட வல்ல குழகன் போலும்” (வீழி) என்று நாவரசரும், “கூடியவிலயம் சதி பிழையாமைக் கொடியிடை யுமையவள் காண, ஆடிய அழகா” (வடமுல்லை) என நம்பியாரூரரும் நவின்றுரைப்பது காண்க. பொன்னம்பலத்தில் திருநடம் புரியும் பெருமானாய்க் காட்சி யளிப்பதனால், பரம் பொருளாம் தன்மை மாறுவதிலன் என்பாராய், “அம்பலத்தில் ஆடுகின்ற எஞ்சலிலாப் பரம்பொருளே” எனக் கூறுகின்றார். எஞ்சல் - குறைதல். திருவருள் ஞானத்தைக் குருவாய்ப் போந்து உணர்த்தும் முறைமையுடையனாதல் பற்றி, “என் குருவே” என இயம்புகின்றார். அருளுவது போலத் தோன்றி அருளாமையை எண்ணி, “ஏழையேனிடத்து நீயும் வஞ்சம் நினைத்தனையாயின்” எனவும், அற்றாயின் அறிவில்லாதவனாகலின், வேறே செய்வகையொன்றும் தெரியேன் என்பார், “என்செய்வேன் என்செய்வேன் மதியிலேனே” எனவும் கையறவு படுகின்றார்.
இதனால், திருவருள் எய்தாமைக்கு வருந்துகின்றமை தெரிவித்தவாறாம். (18)
|