கட
கட்டளைக் கலித்துறை
2747. வேம்புக்கும் தண்ணிய நீர் விடுகின்றனர் வெவ்விடஞ்சேர்
பாம்புக்கும் பாலுண வீகின் றனர்இப் படிமிசையான்
வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேல்எனைநீ
தேம்புக்கும் வார்சடைத் தேவே கருணைச் சிவக்கொழுந்தே.
உரை: தேன் துளிக்கும் நீண்ட சடையையுடைய தேவனும், அருளுருவாகிய சிவக்கொழுந்துமாகிய பெருமானே, கைக்கும் காய்களையுடைய வேப்ப மரத்துக்கு நன்னீரையும், விடம் பொருந்திய பாம்புக்குப் பாலுணவையும் தருகின்றனர்; இந்த நாட்டில் நான் வீண் செயல்கட்கும் தீய செயல்கட்கும் உரியவனாயினேன்; என்றாலும் நீ என்னைக் கைவிடலாகாது. எ.று.
வீம்பு - பயனில்லைத செயல்; தீம்பு - தீமை விளைவிக்கும் செயல். செயல் வேண்டு மென்பது பற்றிவேண்டா வெறுப்புடன் செய்தலை வீம்பென்றலுமுண்டு. தீது - தீம்பெனவும் வழங்கும். வீம்பும் தீம்பு முடையனாதல் பற்றி, எனக்கருள் செய்கின்றாய் இல்லை போலும் என்பாராய், “வீம்புக்கும் தீம்புக்கும் ஆனேன் எனினும் விடேலெனை நீ” என்று கூறுகின்றார். இவ்வுலகவர் கொடுமை விளைப்பவர்க்கும் அன்புடன் இனியது செய்கின்றனர் என்பார் “வேம்புக்கும் தண்ணிய நீர்விடுகின்றனர், வெவ்விடஞ் சேர் பாம்புக்கும் பாலுணவு ஈகின்றனர்” என வுரைக்கின்றார். விடஞ்சேர் பாம்பு என்றதனால் கைக்கும் காய்களை யுடைமை பெய்துரைக்கப்பட்டது. படித் நிலவுலகம். பாம்புக்குப் பாலுணவு தருவதை ஈழ நாட்டு யாழ்ப்பணத்து திருக்கேதீச்சரத்தில் இந் நாளில் காணலாம். நீ வாழ்விக்க வாழும் இவ்வுலகத்தவர் அல்லது செய்யும் வேம்பு பாம்புக்கும் நல்லது செய்வாராக, உலக நாதனாகிய நீ எனக்கு அருளாமை தக்கதன்று என்றற்கு, “நீ எனை விடேல்” என இயம்புகிறார். சிவபிரான் உலகுயிர்கட்கு வாழ்வு தருபவன் என்பதைத் திருஞானசம்பந்தர், “பல்லுலகினில் உயிர் வாழ்க்கை கண்ட நாதனார்” (கேதீச்) என்பது காண்க. சிவ தத்துவத்தின் உச்சியில் விளங்குதலால் சிவனைச் “சிவக் கொழுந்து” என்று கூறுகின்றனர். “கடற்சூர் தடிந்திட்ட சேந்தன் றாதையைத் திருத்தினை நகருட் சிவக்கொழுந்தினை சென்றடை மனனே” (தினைநகர்) எனச் சுந்தரர் பாடுவது காண்க.
இதனால் திருவருள் செய்யாமை உலகியற்கு மாறெனத் தெரிவித்தவாறாம். (19)
|