2748. அடமுடி யாதுபல் ஆற்றாலும் ஏழைக் கடுத்ததுன்பம்
படமுடி யாதென்னை செய்கேன்என் தன்முமம் பார்த்திரங்காய்
திடமுடி யால்அயன் மால்வணங் குந்துணைச் சேவடியாய்
தடமுடி யாய்செஞ் சடைமுடி யாய்நந் தயாநிதியே.
உரை: திடமான பொன்முடி சூடிய தலையால் பிரமனும் திருமாலும் வணங்கி வழிபடும் இரண்டாகிய சிவந்த திருவடிகளையும், பெரிய தலையில் சிவந்த சடை முடியையும் உடையவனே, எங்கள் திருவருட் செல்வமே, ஏழையாகிய என்னைச் சார்ந்து வருத்தும் துன்பத்தை என்னாற் போக்கவும் முடியாது; இனிப் படவும் முடியாது; யான் யாது செய்வேன்? துன்பத்தாற் கரிந்த என் முகம் பார்த்து மனமிரங்கி அருள் புரிவாயாக. எ.று.
திடம் - வன்மை. வலிய மணி குயின்ற பொன்னாற் செய்யப்பட்ட தென்றற்குத் “திட முடி” என்று குறிக்கின்றார். “விண்ணோர் முடியின் மணித்தொகை” (எம்பாரை) எனத் திருவாசகம் ஓதுவது காண்க. “வணங்குதல்” கூறுதலால் தலையால் என்பது வருவிக்கப்பட்டது. துணை - இரண்டு. சேவடி - சிவந்த திருவடி. தட முடி - பெரிய தலை; சென்னியெனினுமமையும். முடியிற் சடை முடித்திருத்தலின் “சடை முடியாய்” எனக் கூறுகிறார். தயாநிதி - அருட் செல்வம். போதிய அறிவில்லாமையாலும் எவ்வகையாலும் நீக்க முடியாச் செய்வினையாற் போந்து தாக்குதலால், “அட முடியாது பல்லாற்றாலும் ஏழைக்கு அடுத்த துன்பம்” எனவும், தொடர்ந்து நோய் செய்தலாற் “பட முடியா” தெனவும் பகர்கின்றார். ஆற்றாமை பற்றி, “என்னை செய்கேன்” என்றும், துன்பத் தீயாற் கரிந்து சோர்ந்த முகம் கண்ட விடத்துக் காண்பார்க்கு அருளுணர்வு தானே போதரும் என்பார், “என்றன் முகம் பார்த்து இரங்காய்” என்றும் இசைக்கின்றார். முகத்தைப் பார்த் தருள்வாயாயின், நின் திருவுள்ளத்தில் திருவருள் பெருகும் என்பது கருத்து.
இதனால், ஏழையாகிய என் முகம் பார்த்து இரங்குக என வேண்டியவாறாம். (20)
|