அறுச
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
2749. பொல்லா வாழ்க்கைத் துயரம்எனும்
புணரிப் பெருக்கில் வீல்ந்தழுந்திப்
பல்லார் நகைக்கப் பாவிபடும்
பாட்டை முழுதும் பார்த்திருந்தும்
கல்லால் அமர்ந்தீர் என்னிரண்டு
கண்கள் அனையீர் கறைமிடற்றீர்
எல்லாம் உடையீர் மால்விடையீர்
என்னே இரங்கி அருளீரே.
உரை: கல்லாலின் கீழ் எழுந்தருளிய பெருமானே, என்னுடைய இரண்டு கண்களும் போன்றவரே, விடக்கறை படிந்த கழுத்தையுடையவரே, எல்லாமுடைய இறைவனே, பெரிய விடையை ஊர்தியாக வுடைய சிவனே, பொல்லாங்கு நிறைந்த உலகியல் வாழ்க்கை தரும் துன்பமாகிய கடலின்கண் வீழ்ந்து மூழ்கிக் கண்டோர் பலரும் கண்டு இகழ்ந்து சிரிக்கப் பாவியாகிய யான் படும் துன்பத்தைப் பார்த்திருந்தும் இரக்கம் கொண்டு அருள் செய்யா திருக்கின்றீரே, இதனை என்னென்பது. எ.று.
கல்லால மரத்தின் கீழே ஞான குருவாய் எழுந்தருளி நால்வர்க்கு அறமுரைத் தருளிய வரலாற்றை நினைந்து, “கல்லால் அமர்ந்தீர்” என வுரைக்கின்றார். “அளப்பரிதாயவர் ஆலின் கீழ் ஆலின் நீழல் அறம் பகர்ந்தார்” (பாசூர்) எனச் சான்றோர் கூறுதல் காண்க. “கல்லால் நிழல் மலை வில்லார்” என்பது சிவஞான போதம். ஞான நாட்டம் நல்குவது பற்றி, என்னிரண்டு கண்களனையீர்” என்றும், விட முண்டு கண்டம் கறுத்தமை யெண்ணிக் “கறை மிடற்றீர்” என்றும், உயிர் உடல் பொருள் ஆகிய அனைத்தும் உடைமையாகக் கொண்டுள்ளமை புலப்பட, “எல்லாமுடையீர்” என்றும், அறத்தையே எருதாக்கி யூர்பவராதல் தோன்ற “மால் விடையீர்” என்றும் இசைக்கின்றார். உலகியல் வாழ்வில் உயிர்கள் எய்தும் இன்பத்தினும் துன்பம் பெரிதாதலால், “பொல்லா வாழ்க்கைத் துயர மெனும் புணரிப் பெருக்கு” எனக் குறிக்கின்றார். புணரிப் பெருக்கு - அலைகளையுடைய கடல். துன்பப் படுவோரைக் கண்டு இரங்குவோரினும் எள்ளி இகழ்பவர் உலகிற் பலராதலால், “பல்லார் நகைக்கப் பாவி படும் பாடு” என வுரைக்கின்றார். பாடு - துன்பம். தாம் படும் துன்பமனைத்தையும் இறைவன் அறிவனாதலின், “பார்த்திருந்தும்” எனக் கூறுகிறார். பார்த்த வழி எத்திறத்தோரும் இரங்குவர்; நீ இரக்கம் கொண்டிலை என்பது கருத்து; ஆயினும் பெருமானாகிய நீ நின் திருவருளைச் செய்கின்றாய்; அருளுருவாகிய நீ இரங்கா திருப்பது வியப்பைத் தருகிறது என்றற்கு, “என்னே இரங்கி யருளீரே” என இயம்புகிறார்.
இதனால், துயரங்களைப் பார்த்தும் இரக்கம் கொள்ளாமை வியப்பாகு மெனவுரைத்தவாறாம். (21)
|