2750.

     பொன்னை உடையார் மிகுங்கல்விப்
          பொருளை உடையர் இவர்முன்னே
     இன்னல் எனும்ஓர் கடல்வீழ்ந்திவ்
          வேழை படும்பா டறிந்திருந்தும்
     மின்னை நிகரும் சடைமுடியீர்
          விடங்கொள் மிடற்றீர் வினைதவிர்ப்பீர்
     என்னை உடையீர் வெள்விடையீர்
          என்னே இரங்கி அருளீரே.

உரை:

     மின்னற் கொடி போல் ஒளிரும் சடையை முடியிற் கொண்ட பெருமானே, விட முண்ட கழுத்தையுடையவரே, உயிர்களைப் பிணிக்கும் வினைத் தொடர்பை யறுத்துதவும் தேவனே, என்னை அடிமையாக வுடைய ஆண்டவனே, வெள்ளை நிற எருதேறும் தலைவனே, மிக்க பொன்னும் பொருளும் உடைய செல்வர்களும், கல்வியாகிய பொருளை மிகவுடைய அறிஞர்களும் ஆகிய இப் பெருமக்கள் கண்டிருக்கத் துன்பமென்னும் கடலின்கண் வீழ்ந்து வருந்தும் ஏழையாகிய என் துயரங்களைப் பார்த்திருந்தும் என் மேல் இரக்கங் கொள்ளாதது என்னையோ, அருளுக. எ.று.

     “பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை” (பொன்வண்) என்று சான்றோர் புகழ்வது கொண்டு, “மின்னை நிகரும் சடை முடியீர்” எனவும், நீலகண்டன் எனப் போற்றுதலால், “விடங்கொள் மிடற்றீர்” எனவும், செய்வினையிரண்டும் சேராவாறு தொடர்பறுத்து இன்பத் துய்க்கும் “பால்வரை தெய்வமாதல்” பற்றி “வினை தவிர்ப்பீர்” எனவும், உடல் கருவி கரணங்களையும் உலகு போகங்களையும் தந்து ஆள்வதனால், “என்னை யுடையீர்” எனவும், வெள்ளை யேற்றை யூரும் வித்தக னெனப் பரவப்படுவதால், “வெள்விடையீர்” எனவும் உடுத்தோதுகின்றார். முன்னைத் தவத்தின் விளைவாகப் பொன்னும் பொருளும் மிக வுடையவராயின செல்வர்களும், உயர்ந்த கல்வியால் மிக்க அறிஞர்களும் என் தவமின்மை கண்டு இகழ்ந்து நோக்குமாறு, துயர் உழக்கின்றேன் என்பாராய், “பொன்னையுடையார் மிகும் கல்விப் பொருளை யுடையார் இவர் முன்னே இன்னல் எனும் மோர் கடல் வீழ்ந்து” என்று உரைக்கின்றார். இன்னல் - துன்பம்; இதற்கு எதிர்மொழி நன்னர் என்பது. தவமின்மை புலப்பட, “இவ்வேழை படும்பாடு” என்று கூறுகிறார். யான் துன்புறுவதையும், பொன்னும் கல்வியு முடையார் இகழ்ந்து நோக்குவதையும் திருவருட் கண்களாற் பார்த்தும் நீ இரங்கா திருப்பது வருத்தம் தருகிறது என்பார், “ஏழைபடும்பாடு அறிந்திருந்தும் என்னே இரங்கி யருளீரே” என முறையிடுகின்றார். பாடு - துன்பம்.

     இதனால், உயர்ந்தோர் எனது தவமின்மை கண்டு இகழுமாறு துன்புறும் என் மேல் இரங்காமை நன்றன் றென்று விண்ணப்பித்தவாறாம்.

     (22)