கல
கலித்துறை
2751. ஆயும் வஞ்சக நெஞ்சன்இவ் அடியனேன் ஐயா
நீயும் வஞ்சக நெஞ்சன்என் றால்இந்த நிலத்தே
ஏயும் இங்கிதற் கென்செய்வேன் என்செய்வேன் எவைக்கும்
தாயும் தந்தையும் ஆகிஉள் நிற்கின்றோய் சாற்றாய்.
உரை: எல்லா வுயிர்க்கும் தாயும் தந்தையுமாய் உள்ளத்தே எழுந்தருளும் சிவபெருமானே, இந்த நிலவுலகத்தில் அடியவனாகிய யான் நுணுகிக் காணத் தக்க வஞ்ச நினைவுகளைக் கொண்ட நெஞ்சினையுடையவன்; என்னைப் போல் நீயும் வஞ்சனை பொருந்திய நெஞ்சினையுடையவ னென்பதாயின், யான் வாழ்தற்குப் பொருந்திய இவ்விடத்தில் யான் யாது செய்வேன்; நீயே சொல்லுக. எ.று
.
எவற்றிற்கும் என்ற்பாலது செய்யுளாதலின் சாரியை பெறாது எவைக்கும் என நிற்கிறது. எல்லா வுயிர்கட்கும் தாயும் தந்தையுமாய் அவை ஒவ்வொன்றினுள்ளும் இருக்கின்றான் என்று சான்றோர் உணர்ந்து உரைத்தலால், “எவைக்கும் தாயும் தந்தையுமாகியுள் நிற்கின்றோய்” என வுரைக்கின்றார். வஞ்ச நினைவுகள் உள்ளத்திற் புதைந்து உணர்வாலன்றிப் புறக்கருவியாகிய கண் முதலியவற்றாற் காணப்படுவதின்மையால், “ஆயும் வஞ்சக நெஞ்சன் இவ்வடியனேன்” என்று கூறுகின்றார். ஆய்தல் - நுணுகுதல். மாய வுலகில் மாயா காரியவுடம்பினுள் இருந்து மாய வாழ்வு நடத்துபவனாதலால், எனக்கு சவஞ் நெஞ்சம் பொருந்துவதாம்; தூய திருவருள் மேனியனாய் உனது நெஞ்சம் வஞ்ச வியல்பினதாதல் கூடாதாகலின், “நீயு வஞ்சக நெஞ்ச னென்றால்” என மொழிகின்றார். இது குறித்து ஒருவரிடம் சொல்லவோ ஒன்று செய்யவோ மாட்டாமை பற்றி, “இதற் கென்செய்வேன்” என் செய்வேன் என வருந்துகிறார்.
இதனால் நெஞ்சம் வஞ்ச முடையதவாதற்கு வருந்தியவாறாம். (23)
|