2752. நானும் பொய்யன்நின் அடியனேன் தண்ணருள் நிதிநீ
தானும் பொய்யன்என் றால்இதற் கென்செய்வேன் தலைவா
தேனும் பாலுந்தீங் கட்டியும் ஆகிநிற் றெளிந்தோர்
ஊனும் உள்ளமும் உயிரும்அண் ணிக்கின்ற உரவோய்.
உரை: தேனும் பாலும் இனிய கரும்புக் கட்டியும் போன்று நினது மெய்ம்மை யுணர்ந்த பெருமக்களின் உடம்பும் உள்ளமும் உயிரும் கலந்து இனிக்கின்ற திண்ணிய ஞானப் பொருளாகியவனே, நான் மனத்தாலும் மெய்யாலும் பொய்யனாவேன்; என்னைப் போல் நீயும் பொய்ய னெனப் படுவதாயின் இந்நிலைமைக்கு யாது செய்வேன்; தலைவனாகிய நீதான் அருள வேண்டும். எ.று.
மன மொழி மெய்களால் நான் நிலையின்றி மாறும் இயல்பினால் பொய்ய னென்பது உலகறிந்த உண்மையாதலால், “நானும் பொய்யன்” என வுரைக்கின்றார். எனக்குத் தலைவன் நீ; உனக்கு அடிமை நான் எனத் தொடர்பு காட்டற்குத் “தலைவா” என்றும், “அடியனேன்” என்றும் கூறுகின்றார். மெய்ம்மையே யுருவாகிய நீயும் அருளாமற் பொய் செய்து பொய் படுவனாயின், எது கொண்டு உண்மை தெளிவேன் என்பாராய், “இதற்கு என்செய்வேன்” என்று இயம்புகின்றார். தீங்கட்டி - கரும்பிற் சாற்றைக் காய்ச்சி யெடுக்கும் இனிய கட்டி. அண்ணித்தல் - இனித்தல். சடையர் கபாலியார், “எண்ணித் தம்மை நினைத்திருந்தேனுக்கு அண்ணித்திட் டமுதூறும் என் நாவுக்கே” (வெண்ணி) எனத் திருநாவுக்கரசர் கூறி யருளுவ தறிக. உரவோன் - திண்ணியவன்; அறிவாற்றல்களில் மெலிவுறாத் தன்மையன் என்பது கருத்து. “வான் கெட்டு மாருத மாய்ந்தழனீர் மண் கெடினும் தான் கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையன்” (தெள்ளே) என வரும் திருவாசகம் காண்க.
இதனால், மெய்ம்மையும் திண்மையும் உருவாகிய நீ பொய்யனாதல் கூடாதென இறைவன்பால் முறையிட்டவாறாம். (24)
|