ந
நாலடித்தரவு கொச்சக்கலிப்பா
2753. நேசனும் நீ சுற்றமும்நீ நேர்நின் றளித்துவரும்
ஈசனும்நீ ஈன்றாளும் எந்தையும்நீ என்றேநின்
தேசுறுநீர் ஐந்தெழுத்தும் செப்புகின்ற நாயேனை
ஆசகலும் வண்ணம் அருள்புரிந்தால் ஆகாதோ.
உரை: ஆண்டவனே, எனக்கு நண்பனும் சுற்றத்தானும், நேர் நின்றறிவறிவித் தருளும் அறிவுச் செல்வனும், பெற்ற தாயும் தந்தையும் நீயே யாவாய் என்ற கருத்தை யுட்கொண்டு, விளக்கமான நினது அருட் புகழை யுணர்த்தும் திருவைந் தெழுத்தை நாளும் ஓதுவேனாக, நாயினேனுடைய மலக் குற்றங்கள் நீங்கி யோடுமாறு அருள் செய்வாயாயின் நின் பெருமைக்கு ஒத்த தாகாதோ, சொல்லுக. எ.று.
நேசன் - நல்லன தெரிவித்து நன்னெறிக்கண் நிறுத்தும் அன்பன். சுற்றம் - துன்பக் காலத்து நீங்காதிருந்து துணை செய்பவன். ஈசன் - செல்வன்; பொருளேயன்றி அருட் செல்வமும் மிக வுடையவன் என அறிக. தேசு - ஒளி. ஈசன் புகழ் எவ்வுலகத்தும் பரந்து நின்று ஒளிர்வதாகலின், “தேசுசீர்” எனவும், அவனுடைய பெரும் புகழனைத்தும் சிவாயநம என்ற எழுத்து ஐந்தனுள் அடங்குதல் தோன்ற, “தேசுறுசீர் ஐந்தெழுத்” தெனவும் உரைக்கின்றார். நாளும் ஓதி யுணர்வின்கண் நினைதல் கடனாதலால், “செப்புகின்ற நாயேன்” எனத் தெரிவிக்கின்றார். ஆசு - ஈண்டு மலமாயை கன்மத் தொடர்பால் உளவாகும் குற்றங்கள், இக்குற்றம் அனைத்தும் நீங்கினாலன்றித் திருவருள் ஞான வின்பம் எய்தாமையால், “ஆசு அகலும்வண்ணம் அருள் புரிந்தாலாகாதோ” எனக் கேட்கின்றார். ஆகாதோ - பெருமைக்கு ஒத்த செயலாகாதோ. “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது” (நமச்சி) என்பர் ஞானசம்பந்தர்.
இதனால், திருவைந் தெழுத்தை யோதி யொழுகும் என் குற்றங்களைப் போக்கி யருளுக என முறையிட்டவாறாம். (25)
|