கட

கட்டளைத் கலித்துறை

2754.

     ஆற்றால் விளங்கும் சடையோய்இவ் வேழை அடியனும்பல்
     ஆற்றால் வருந்தும் வருந்தும்எல் லாம்முற் றறிந்தும்இன்னம்
     ஆற்றா திருத்தல்தநின் பேரருள் ஆற்றுக்கழகுகொலோ
     ஆற்றாமை மேற்கொண்டழுதால் எவர்எனை ஆற்றுவரே.

உரை:

     கங்கையாற்றால் விளக்க மிகும் சடையையுடைய பெருமானே, அடியனாகிய யானும் பலவேறு வகையால் வருந்துகிற வருத்தங்களெல்லாவற்றையும் முழுதும் கண்டறிந்தும் இனியும் அவற்றைப் போக்காமல் இருப்பது உன்னுடைய பேரரு ணெறிக்கு அழகாகாது; வருத்தங்களைத் தாங்க மாட்டாமல் மிக வருந்தி நான் அழுவேனாயின், ஆறுதல் கூறி என்னை ஆற்றுவிக்கக் கூடியவர் யாவர்? சொல்லியருள்க. எ.று.

     சடை முடியில் தங்குகிற கங்கைப் பேரியாறு சிறு சடையொன்றின் வழியாக நிலத்திற் பாய்வது கண்டு நாடு பயனடைந்து மேன்மை யுற்றுப் பாராட்டுவது பற்றி, “ஆற்றால் விளங்கும் சடையோய்” என விளம்புகிறார். நிலவுலகத்தையே அழிப்பது போற் பெருகி வந்த கங்கை யாற்றைச் சடையிற்றாங்கியதன் செருக்கடக்கிய செயல் மக்களுலகில் பெரிதும் பாராட்டப் படுவது கண்டு இவ்வாறு கூறுகின்றா ரெனினு மமையும். “வெள்ளந் தாழ்விரி சடையாய்” (சதகம்) எனத் திருவாசகம் ஓதுவது இதற்கு ஆதரவு தருவது காண்க. தன்னைக் குறித்தற்கு இகரச் சுட்டு நிற்கிறது. ஏழை யடியன், நல்லறிவில்லாத அடிமையாகிய யான், அகக் கரணம் புறக் கரணங்களாலும், வினை வகைகளாலும், பிறவித்துன்பங்கள் மூன்றாலும் துன்பங்கள் மேவுதலால், “பல்லாற்றால் வருந்தும் வருத்தம்” என்று கூறுகின்றார். இவை யாவும் முற்றறிவினனாகிய இறைவன் அறிய நிகழ்வதால், “வருத்த மெல்லாம் முற்றறிந்தும்” என மொழிகின்றார். முற்றவறிந்தும் எனற்பாலது “முற்றறிந்தும்” என வந்தது. இனியும் - என்பது இன்னும், இன்னமும் என வழங்கும். ஆற்றாது இருத்தல், துன்பத்தைப் போக்காமலிருப்பது. நீ மேற்கொண்டிருக்கும் பெருமை சான்ற திருவருள் நெறிக்குப் பொருந்தாது என்பாராய், “நின் பேரருள் ஆற்றுக்கு அழகு கொலோ” என்று புகல்கின்றார். துன்பங்களால் ஆற்றாமை மிக்க போது அரற்றி அழுவது தவிர வேறு செயலில்லை; அது கண்டு ஆற்றத் தக்கவரும் நின்னையன்றிப் பிறரில்லை என்பார், “ஆற்றாமை மேற்கொண் டழுதால் எவர் எனை ஆற்றுவரே” என்கின்றார்.

     இதனால், துன்பங்களால் ஆற்றாமை யுற்றுத் தாம் அழுதரற்றும் திறம் எடுத் தோதியவாறாம்.

     (26)