2756.

     ஒழியாக் கவலை உறுகின்றேன்
          உடையாய் முறையோ முறையேயோ
     அழியாக் கருணைக் கடலேஎன்
          அரசே முறையோ முறையேயோ
     பொழியாப் புயலே அனையார்பால்
          புகுவித் தனையே முறையேயோ
     இழியாத் திரிதந் துழல்கின்றேன்
          இறைவா முறையோ முறையேயோ.

உரை:

     என்னையுடைய பெருமானே, குன்றாத அருட் கடலே, அருளரசே, இறைவனே, நீங்காத மனக்கவலை யுற்று, பெய்யாத மேகம் போன்ற கன்னெஞ்சரான செல்வரிடம் சென்று வருந்தச் செய்ததுடன், இகழ்ச்சி யுற்று எங்கும் திரிய விட்டாய், இது முறையாகாது. எ.று.

     உடல் பொருள் உயிர் மூன்றையும் பெற்றுக் கொண்டமை விளங்க “உடையாய்” என்றும், மேகங்களால் குறையுறும் நீர்க்கடல் போலாது ஈயக் குறை படாத அருட் கடல் எனச் சிறப்பித்தற்கு, “அழியாக் கருணைக் கடலே” என்றும், வாழ்வித்தலால் “அரசே” என்றும் கூறுகின்றார். மழை பொழியாத மேகம் போற் கொடைத் தன்மையில்லாத செல்வர்பாற்சென்று கொடாமையால் வருந்தச் செய்தது முறையாகா தென்பார், “பொழியாப் புயலே யனையார்பால் புகுவித்தனையே” எனவும், கொடாமையுடன் இகழ்ந்து புறம் போகச் செய்ததனால் ஊரூராய்ச் சென்று தாம் திரிந்தமை தோன்ற, “இழியாத் திரிதந் துழல்கின்றேன்” எனவும், இச்செயல்கள் துன்பம் விளைவித்தமைக்கு வருந்தினமை “விளங்க முறையோ முறையோ” எனவும் முறையிடுகின்றார்.

     இவ்விரண்டு பாட்டுக்களால் இருண்ட மனத்தில் மயக்கமுற்றதும் ஈயாத செல்வரிடம் சென்று வருந்தியதும் முறையிடுகின்றார்.

     (28)