எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

2757.

     மதிஒளிர் கங்கைச் சடைப்பெருங் கருணை
          வள்ளலே தெள்ளிய அமுதே
     நிதிஒளிர் வாழ்க்கை இந்திரன் முதலோர்
          நிலைத்தவான் செல்வமும் மண்ணில்
     பதிஒளிர் வாழ்க்கை மணிமுடி அரசர்
          படைத்திடும் செல்வமும் வேண்டேன்
     கதிஒளிர் நினது திருவருட் செல்வக்
          களிப்பையே கருதுகின் றனனே.

உரை:

     பிறைச்சந்திரன் இருந்து விளங்கும் சடையையுடைய அருள் வள்ளலாய்த் தெள்ளிய அமுதம் போன்றவனே. செல்வப் பெருக்கையுடைய இந்திரன் முதலிய தேவர்களின் நிலையான செல்வ வாழ்வையும், தலைநகர்க்கண் வாழும் சிறப்புடைய மணி யிழைத்த முடியையணிந்து செல்வம் படைத்தவர்களாகிய வேந்தர்களின் செல்வ வாழ்வையும் யான் விரும்புவதில்லை; மேற் கதியாக விளங்கும் நின் திருவருட் செல்வப் பெருவாழ்வையே விரும்புகின்றேன். எ.று.

      மதியென்றது - ஈண்டுப் பிறைச்சந்திரனை யென அறிக. தேய்ந்து சிறுகிய பிறைமதிக்குத் தேயா நிலை தந்த வளம் நினைந்து, “மதியொளிர் கங்கைச் சடைப் பெருங் கருணை வள்ளலே” என விதந்து பேசுகின்றார். “பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேரருளாளனார்” (கழுமலம்) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. யாவராயினும் வழிபடுவார்க்கு வரம் தரும் வள்ளன்மை பற்றி, “பெருங் கருணை வள்ளலே” என்று புகழ்கின்றார். நினையும் நெஞ்சிற்குப் பெரிய இன்பத் தேன் சொரிதலின், “தெள்ளிய அமுதே” என்கிறார். சங்கநிதி, பதுமநிதி யெனப்படும் செல்வம் பலவுமுடையனாய், போக நுகர்ச்சியே வாழ்வாக வுடையனென்பது பற்றி, இந்திரனைச் சிறந்தெடுத்து “நிதி வளர் வாழ்க்கை தேவர்கள் செல்வம் நிலைபே றுடையதாகலின் “நிலைத்த வான் செல்வம்” எனக் கூறுகின்றார். இந்திரர்கள் மாயினும் பன்முறையும் பிறர்பால் தோல்வியடையினும் இந்திர னுலகமோ, இந்திர போகமோ மாறுவதில்லையாகலின் இவ்வாறு உரைக்கின்றா ரெனினும் பொருந்தும். நிலைபேறுடையதாயினும் வேண்டப் படாமை விளங்க, “நிலைத்த வான் செல்வமும் வேண்டேன்” என விலக்குகின்றார். பதி - தலைநகர். தலைநகர் நலம் பலவும் குறைவறவுடையதாகலின், வேந்தர் வாழ்க்கையைப் “பதியொளிர் வாழ்க்கை” எனச் சிறப்பிக்கின்றார். திரட்டப்படும் இயல்பினதாகலின், “படைத்திடும் செல்வம்” எனப் புகல்கின்றார். படைத்து இடும் எனப் பிரித்து, திரட்டப் பெற்று வேண்டினார்க்கு உதவப்படும் செல்வ மென இயைத்தலும் ஒன்று. கதிகளிற் சிறந்து உயர்ந்து விளங்குவது பற்றி, சிவகதியைக் “கதி” எனக் குறிக்கின்றார். கதியால் எய்தப்படும் திருவருள் இன்பம் என்றற்குக் “கதியொளிர் திருவருட் செல்வக் களிப்பு” எனப் புகழ்கின்றார்.

     இதனால் மண்ணக அரச போகத்தினும் விண்ணக இந்திர போகத்தினும் திருவருட் போகம் வேண்டப் பட்டமை தெரிவித்தவாறாம்.

     (29)