கட
கட்டளைக் கலித்துறை
2758. வெள்ளங்கொண் டோங்கும் விரிசடை
யாய்மிகு மேட்டினின்றும்
பள்ளங்கொண் டோங்கும் புனல்போல்நின்
தண்ணருட் பண்புநல்லோர்
உள்ளங்கொண் டோங்கும் அவமே
பருத்த ஒதிஅனையேன்
கள்ளங்கொண் டோங்கும் மனத்துறு
மோஉறிற் காண்குவனே.
உரை: கங்கை நீரைத் தன்கண் கொண்டு தாங்கி விளங்கும் விரிந்த சடையையுடைய சிவபெருமானே, உயர்வு மிக்க மேட்டினின்றும் பள்ளம் நோக்கி யோடும் தண்ணீரின் இயல்பையுடைய நினது தண்ணிய திருவருட் பண்பு, நற்பண்புடைய நல்லவர் உள்ளத்தில் தங்கி மேம்படும் நலத்ததாகும்; வீணே பருத்த ஒதி மரம் போன்ற எனது கள்ள நினைவுகளே மிக்குற் றுயரும் மனத்தின்கண் வந்தெய்துமோ? எய்துமாயின் யானும் அதனைக் கண்டு மகிழ்வேன். எ.று.
வெள்ளம் - கங்கையாற்றின் பெருக்கு. நீர்ப் பெருக்கைத் தாங்கற்கு விரிந்த சடை யென்றற்கு “விரிசடை” எனச் சிறப்பிக்கின்றார். “வெள்ளம் தாழ் விரிசடையாய்” (சதக) எனத் திருவாதவூரர் தெரியக் கூறுவது காண்க. பள்ளத்தை நோக்கி ஓடுவது நீர்க்கு இயல்பென அறிக; அதனால் நாளடைவில் பள்ளம் உயர்வது குறிக்கப் “பள்ளம் கொண்டு ஓங்கும் புனல்” எனப் பகர்கின்றார். அதுபோல் நினது திருவருட் பெருக்கும் “தாழ்வெனும் தன்மையோடு சைவமாம் சமயம் சாரும் ஊழ்” (சிவ. சித்தி.) பெற்ற நல்லோர் உள்ளத்திற் பாய்ந்துயரும் பாங்கினை யுடைய தென்பார், “நின் திருவருட் பண்பு நல்லோர் உள்ளம் கொண்டு ஓங்கும்” என உரைக்கின்றார். அவப் பண்பும் கள்ள நினைவுகளும் நிறைந்து உள்வலி யில்லாத ஒதி மரம் போன்றுள்ளேனாதலின், மேடிட்ட என் மனத்தின்கண் பாய்தற் கில்லை என்பாராய், “அவமே பருத்த ஒதி யனையேன் கள்ளங் கொண்டோங்கும் மனத்துறுமோ” என வினவுகின்றார். மேடு பள்ள மென்பதில்லை, திருவருள் எங்கும் சென்று பாயும் வன்மையுடைய தெனின், என் மனத்திற் பாயுமாயின் காண்பேன் என்பார், “உறிற் காண்குவனே” என வுரைக்கின்றார்.
இதனால், திருவருள் என் மனத்தின்கண் எய்துமாயின் காண்பேன் எனத் தெரிவித்தவாறாம். (30)
|