2759. ஐயாமுக் கண்கொண்ட ஆரமு தேஅரு ளார்பவள
மெய்யாமெய்ஞ் ஞான விளக்கே கருணை விளங்கவைத்த
மையார் மிடற்று மணியேஅன் றென்னை மகிழ்ந்ததந்தோ
பொய்யாஎன் செய்வல் அருளா யெனில்எங்குப் போதுவனே.
உரை: ஐயனே, கண்கள் மூன்றுடைய அரிய அமுதம் போன்றவனே, பவளம் போன்ற திருமேனியை யுடையவனே, உண்மை ஞான விளக்கமே, அருளுடைமை யாவரும் விளங்கக் காட்டாமை போன்ற கழுத்தையுடைய மாணிக்க மணியே, ஐயோ, அன்று, ஆட்கொண்ட போது என்னை விரும்பியது பொய்யாய் விட்டதோ? நீ இப்போது அருளாயின் யான் யாது செய்வேன்; எங்கே போவேன். எ.று.
சிந்திப்பார் சிந்தையின்கண் தேனூற விளங்குதலால் “ஆரமுதே” என்று கூறுகிறார். பவளம் போற் சிவந்த மேனியும் அருளே யுருவாகவும் இருப்பதனால், “அருளார் பவள மெய்யா” எனவும், உண்மை ஞானிகட்குச் சிவஞான விளக்கம் நல்குவது கொண்டு, “மெய்ஞ்ஞான விளக்கமே” எனவும் இசைக்கின்றார். “திகழும் சோதி மெய் கிளரும் ஞான விளக்குக் கண்டாய்” (மறைக்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. தேவர்கள்பாற் கொண்ட கருணையால் அவர்கள் அமுதுண்டற்கு, இடையூறாகப் போந்த நஞ்சை யுண்டு கழுத்திற் கறைபடச் செய்து கொண்டமை பற்றி, “கருணை விளங்க வைத்த மையார் மிடற்று மணியே” எனக் கூறுகின்றார். “விண்ணவருக்கா வேலையுண் ணஞ்சம்
விருப்பாக வுண்ணவனைத் தேவர்க் கமுதீந் தெவ்வுலகிற்கும் கண்ணவனை” (கண்ணார் கோ.) என ஞானசம்பந்தர் கூறுகின்றமையறிக. தமக்குச் சிவபரம் பொருளிடத்துப் பேராக்காத லுண்டாயதற்குக் காரணம் அவனருளாலாய தெனக் கருதுகின்றாராதலால், அதனை நினைந்து, “அன்றென்னை மகிழ்ந்தது” எனவும், அத் திருவருளால் உளதாகற்பாலதாகிய இன்பம் உள்ளத்தில் எழாமை யுணர்ந்து, “அந்தோ பொய்யா” எனவும் புகல்கின்றார். அவ்வருள் நலம் இல்லாவிடத்து எப்பணியையும் ஆர்வமுடன் செய்யலாகாமைக் கிரங்கி, “அருளா யெனில் என் செய்வல்” என்றும், அது பெறற்கு வேறெவர்பாலும் சேறற் காகாமையால், “எங்குப் போதுவனே” என்றும் வருந்துகின்றார்.
இதனால், அருளில்லையாயில் எச்செயலும் செய்ய மாட்டாமையும், எவரிடமும் போக மாட்டாமையும் தெரிவித்தவாறாம். (31)
|