2760.

     நாரா யணன்திசை நான்முகன் ஆதியர் நண்ணிநின்று
     பாரா யணஞ்செயப் பட்டநின் சேவடிப் பங்கயமேல்
     சீரா யணம்பெறப் பாடுந் திறம்ஓர் சிறிதும்இலேன்
     ஆரா யணங்குற நின்றேன்பொன் மன்றத் தமர்ந்தவனே.

உரை:

     பொற் சபையில் மேவுகின்ற பெருமானே, திருமால் பிரமன் முதலியோர் சென்று திருமுன் படைந்து நின்னுடைய திருவடிகளாகிய தாமரை பொருள் சீரும் சிறப்பும் அமையுமாறு பாடுகின்ற வகையை, ஒரு சிறிதும் இல்லாதவனாகிய யான், அயலவனாய் வருத்தம் மிக நின்றொழிந்தேன். எ.று.

     திசை நான்காதல் பற்றி, நான்முகப் பிரமனைத் திசைமுகன் என்னும் வழக்குப் பற்றித் “திசை நான்முகன்” என்று குறிக்கின்றார்; திசைக் கொன்றாக நாற்றிசையும் நான்முகன் எனினும் பொருந்தும். நாராயணன் - திருமால். ஆதியர் - முதலிய தேவர்கள். நண்ணி நிற்றல் - சென்றடைதல். பாராயணம் - புகழ்களை ஒழுங்காக ஓதுவது. திருமால் பிரமன் முதலிய தேவர்கள் சிவபிரான் திருவடி புகழ்களை ஒழுங்காக ஓதுகின்றார்கள் என்பது கருத்து. சேவடி - சிவந்த திருவடி. பங்கயம்-தாமரை. ஆயணம்-செல்லுதல்; வடசொல். உத்தாராயணம் - தட்சிணாயணம் என்றாற் போல். பாட்டில் சீர்கள் யாப்பியல் மாறாமல் ஒழுங்காகப் பொருந்துவதைச் “சீராயணம் பெறப் பாடும் திறம்” என்று கூறுகின்றார். சீரும் தளையும் எதுகை மோனைகளும் பிறவும் வழுவாமற் பாடுவதை இங்ஙனம் கூறுகின்றார். ஆராய் அணங்குற நிற்பது, அயலார் போல வருத்தம் மிக நின்றொழிதல்.

     இதனால், யாப்பிலக்கண நெறி வழுவாமற் பாடும் திறமை இல்லாதவன் எனத் தம்மைக் கூறுகின்றவாறாம்..

     (32)