2761.

     பேய்கொண்ட நெஞ்சகப் பாழால் வரும்என் பெருந்துயரை
     வாய்கொண் டனந்தர் அனந்தர்க்கும் சொல்ல வராதெனில்இந்
     நாய்கொண் டுரைக்க வருமோஎன் செய்குவன் நச்சுமரக்
     காய்கொண்டு வாழைக் கனியைக்கை விட்ட கடையவனே.

உரை:

     பேய் கொண்டாற் போல் என் நெஞ்சமாகிய பாழ்த்த பொருளால் எனக்கு வருகிற பெரிய துன்பங்களை, எண்ணிறந்த ஆதிசேடர்களாலும் வாய் திறந்து உரைக்க முடியாதெனில், நச்சுத் தன்மையுடைய காயைப் பற்றிக் கொண்டு இனிமை மிக்க வாழைப் பழத்தைக் கைவிட் டொழியும் கடையவனான நாய் போன்ற யான் வாயால் சொல்ல முடியாது. எ.று.

     கணப் பொழுதும் ஒடுங்காது பலவற்றைப் பலவாறு நினைந்து அலைவது பற்றி, நெஞ்சினை, “பேய் கொண்ட நெஞ்சம்” என்றும், பயனில்லாமை குறிக்கப் “பாழ்” என்றும் இயம்புகின்றார். பாழ் - பாழான பொருள். வருந்தும் பெருந்துயர் - வருந்துதற் கேதுவாகிய பெருந்துயர். அனந்தர், அனந்தர் - எண்ணிறந்த ஆதிசேடர். ஆயிரம் நாவுடையவன் ஆதிசேடன் என்பர். சொல்லி முடியாத மிகுதியான தென்றற்குச் “சொல்லவாராது” எனக் கூறுகிறார். இகரச் சுட்டுத் தன்னைக் குறித்தது. நாய் போன்ற யான் குறிக் கொண்டுரைக்க முடியாது என்பார், “நாய் கொண்டுரைக்க வருமோ” என்று சொல்லுகிறார். நச்சு மரக்காய் உண்டாரை வருத்தும் நஞ்சினை யுடைய காய்; நோய் விளைவிக்கும் காய் என்பது கருத்து. கனியிருக்கக் காயை விரும்புதல் கயமையாதலின், “நச்சு மரக்காய் கொண்டு வாழைக் கனியைக் கைவிட்ட கடையவனே” என்று இசைக்கின்றார். கடையவன் - கீழானவன்; கயவன்.

     இதனால் பாழ்த்த நெஞ்சாற் படும் துயரம் பகர வொண்ணாத பான்மைய தென்று பகர்ந்தவாறாம்.

     (33)