2762.

     வன்மாங் கரத்தேந்தும் மாமணியே
          மணிகண்ட மணியே அன்பர்
     நன்மானங் காத்தருளும் அருட்கடலே
          ஆனந்த நடஞ்செய் வாழ்வே
     பொன்மானம் பினைப்பொருந்துப் அம்பினைவைத்
          தாண்டருளும் பொருளே நீஇங்
     கென்மானங் காத்தருள வேண்டுதியோ
          வேண்டாயேல் என்செய்வேனே.

உரை:

     வன்மை மிக்க மானை அழகிய கையில் ஏந்துகிற பெரிய மாணிக்க மணியே, நீலமணி போன்ற கழுத்தையுடைய சிவமணியே, தொண்டர்களின் நல்ல பெருமை காத்தோம்பும் திருவருட் கடலாகிய பெருமானே, அம்பலத்தில் இன்ப நடம் புரியும் வாழ்முதலே, பொன்மானாய்த் தோன்றிய மாரீசனைக் கடனீருட் புகுவித்த இராமனாகிய அம்பினை மேரு வில்லிற் பொருத்தி யாண்ட பரம்பொருளே, நீ இங்கே என் மானத்தைக் காக்க விரும்புகின்றாயோ? விரும்பாயாயின் யான் யாது செய்வேன். எ.று.

     வன்மான் - தாருக முனிவர் வேள்வியி லெழுப்பி விட்ட வலிய மான். அங்கரம் - அழகிய கை. மாமணி - பெரிய மாணிக்க மணி. மணிகண்டன் என்பதிலுள்ள மணி, நீலமணி; கண்டன் - கழுத்தை யுடையவன். மணி - சிவமணி. அன்பர் - சிவத்தொண்டர்; திருநீலகண்டர் முதலிய சிவத்தொண்டர். திருத்தொண்டர் புராணம் முழுதும் திருத்தொண்டரது மானத்தைச் சிவபெருமான் காத்த குறிப்பே நிலவும் பெருமை சான்றதென்பது அறிஞர் அறிந்த செய்தியாகும். அது பற்றியே, “அன்பர் நன்மானம் காத்தருளும் அருட்கடலே” என இயம்புகின்றார். மலவிருளின் நீங்கி ஞான வொளியிற் புகுந்து இன்புறுவது கருத்தாக இறைவன் திருநடம் புரிகின்றான் என்பது அறிவு நூற் கருத்தாகலின், “ஆனந்த நடஞ் செய் வாழ்வே” என வுரைக்கின்றார். பொன் மான், சீதையினின்றும் இராமனைப் பிரிப்பது கருதித் தாடகை மகனாகிய மாரீசன் என்பான் இராமன் முன்பு தோன்றின வரலாற்றை நினைவிற் கொண்டு, “பொன் மான்” என்றும், தாடகையான தன் தாய் கொலையுண்டமைக்குச் சினந்து போருடற்றிய போது இராமன் விடுத்த அம்பு அவனைக் கடலிற் புகுத்திய செய்தியை, “அம்பினைப் பொருந்தும்” என்றும் கூறுகின்றார். அம்பு - கடல். ஐயுருபு கண்ணுருபின் பொருளில் வந்தது. கொல்லாமல் கடலில் வீழ்ந்து மறையச் செய்த செய்தியை, “அம்பினைப் பொருந்தும்” என்று கூறுகிறார். பின்னர் நின்ற அம்பு - திருமாலாகிய அம்பு. திருமாலை அம்பாகக் கொண்டு திரிபுரப் போர்க்குச் சென்ற குறிப்பு விளங்க, “அம்பினை வைத்தாண்டருளும் பொருளே” என வுரைக்கின்றார். இனி - அழகிய மான் போன்ற நம் பிள்ளையைக் கூடி மகிழும் திருமாலாகிய அம்பு என்று கூறலும் ஒன்று. வடலூர்ப் பார்வதி புரத்தில் ஞான சபையைக் கட்டியபோது பொருள் முட்டுப்பட்ட காலத்தில் எதிர்பாரா வகையிற் சமீன்றார் பொருள் விடுப்பப்பெற்று வள்ளற் பெருமான் பாடியதாகச் சொல்லப்படும் வரலாற்றுக் குறிப்பு விளங்க, “இங்கு என் மானம் காத்தருள வேண்டுதியோ” என்று குறிக்கின்றார் என்பர். “மானம் படவரின் வாழாமை முன்னினிதே” (இனியவை) என்ற படிச் சாதலைத் தவிர்த்தமையின், “வேண்டாயேல் என்செய்வேனே” எனக் கூறுகின்றார்.

     இதனாற் பொருள் பெற்று மானம் காக்கப்பட்ட திருவருட் குறிப்பு விதந்தோதப் பட்டவாறாம்.

     (34)