கல
கலிநிலைத் துறை
2763. வைவ மென்றெழு கின்றவர் தமக்கும்நல் வாழ்வு
செய்வம் என்றெமு கின்றமெய்த் திருவருட் செயலும்
சைவ மென்பதும் சைவத்திற் சாற்றிடுந் தலைமைத்
தெய்வம் என்பதும் என்னள வில்லைஎன் செய்வேன்.
உரை: வசை கூறலாம் என நினைந்து முன் வருகின்றவர்கட்கும் இன்ப வாழ்வையே யளிக்கும் நினது திருவருட் செய்கையும், சைவம் என்பதும், சைவ மென்ற சமய நெறிக்குத் தலையாய தெய்வம் சிவம் என்று சைவ நூல்கள் உரைப்பதும் எளியேனாகிய என்னளவில் மெய்யல்ல வெனில் யான் என்ன செய்குவேன். எ.று.
வைதல் - இழித் துரைத்தல்; நிந்தித்தல் என்றுமாம். வைவம் - வசை கூறிப் பழிக்கலாம். சிவபரம்பொருளை வைதுரைக்க எல்லார்க்கும் இயலுவதன்மை புலப்படுத்தற்கு “வைவமென்று எழுகின்றவர் தமக்கும்” என வுரைக்கின்றார். உலகியல் வைதாரை வாழ விடுவதில்லை யாதலால், தெய்வ நிந்தனை தீது என்பது அறநூற் கருத்தென அறிக. நல்வாழ்வு - இன்ப வாழ்வு; செல்வக் குறைவில்லாத வாழ்வென்பது முண்டு. சைவம் - சிவ சம்பந்தம்; “சைவம் சிவனுடைய சம்பந்தமாகுதல்” (திருமந்) என்பர் திருமூலர். சைவ சமயத்துக்குரிய சிவாகமங்களையும் சைவம் என்பர்; “இது சைவம் நிகழ்த்து மாறே” (சிவப்) எனப் பெரியோர் வழங்குவதறிக. “சைவத்தின் மேற் சமயம் வேறிலை யதிற் சார்சிவமாம் தெய்வத்தின் மேற் றெய்வம் வேறிலை” என்று சான்றோர் கூறுவதை இப் பாட்டு வற்புறுத்துகின்றது. பிறர் எல்லாம் இனிது வாழக் காண்பதால், “என்னளவில்லை” என்றும், இக்குறை நீக்குவது சிவத்தின் செயலாதலின் என் செய்வேன்” என்றும் கூறுகின்றார்.
இதனால், என்னை நல்வாழ்வு பெற வருளாமை சைவ நெறிக்கு ஒத்த தன்றென உரைத்தவாறாம். (35)
|